ராமநாதபுரத்தில் பயங்கரம்: முன்விரோதத்தில் வாலிபர் எரித்துக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக வாலிபர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராமநாதபுரத்தில் பயங்கரம்: முன்விரோதத்தில் வாலிபர் எரித்துக்கொலை - ஆட்டோ டிரைவர் கைது
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் பாலசுப்பிர மணியசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். அவருடைய மகன் ஜெய்சங்கர் (வயது 35). வண்டிக்காரத்தெரு பகுதியில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் ராமநாதபுரம் சாயக்கார ஊருணி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேசுக்கும் (41) முன்விரோதம் இருந்துள்ளது.

இதுதொடர்பாக சுரேஷ் அடிக்கடி ஜெய்சங்கரை மிரட்டி வந்தாராம். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜெய்சங்கர் ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில் டாஸ்மாக் கடை முன்பு மதுபோதையில் படுத்து கிடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த சுரேஷ், அங்கு ஜெய்சங்கர் படுத்திருந்ததை பார்த்துள்ளார். உடனே அவர் தனது ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து ஜெய்சங்கர் மீது ஊற்றி தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

தீப்பிடித்து எரிந்த போது திடீரென மழை பெய்துள்ளது. இதனால் ஜெய்சங்கர் மீது எரிந்த தீ அணைந்துள்ளது. அதிகாலை வரை தீக்காயத்துடன் கிடந்த ஜெய்சங்கர் மதுபோதை தெளிந்த பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் தாய் சந்திராதேவி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மகனை சேர்த்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்தார்.

சிகிச்சையில் இருக்கும் போது, ஜெய்சங்கர் அளித்த தகவலின் பேரில் ஆட்டோ டிரைவர் சுரேஷ் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது போலீசாருக்கு தெரியவந்தது. அதன் அடிப்படையில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சுரேசை மடக்கி பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

அங்கு அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் சுரேஷ் தாக்கப்பட்டாராம். அதில் தலையில் படுகாயமடைந்த அவர், சிகிச்சைக்காக அதிக அளவு செலவு செய்த பின்பு உயிர் பிழைத்தாராம். தாக்கப்பட்டதற்கு ஜெய்சங்கர்தான் காரணம் என்றும், அவரை பழிவாங்க காத்திருந்ததாகவும், இதனால்தான் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் மீது ராமநாதபுரத்தில் ஏற்கனவே 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சில காரணங்களுக்காக இவரை பணிநீக்கம் செய்ததால் ஆத்திரமடைந்து, நள்ளிரவில் பள்ளிக்கு சென்று சுவர் ஏறி குதித்து அங்கிருந்த வேனுக்கு தீவைத்து எரித்துள்ளார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் கோர்ட்டில் அபராதம் செலுத்தி உள்ளார். இதுதவிர மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் சுரேஷ் குடும்ப தகராறில் மனைவி, மகளை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.

அவர் மீது ஜெய்சங்கரின் தாய் சந்திராதேவி அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து சுரேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரத்தில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com