அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்; தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே ஆட்டோவில் வந்த மர்மகும்பல் தி.மு.க. பிரமுகரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றுவிட்டது.
அண்ணாநகர் போலீஸ் நிலையம் அருகே பயங்கரம்; தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை
Published on

வெட்டிக்கொலை

சென்னை அண்ணா நகர் போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்த ஒருவரை, எதிரே வந்த ஆட்டோவில் இருந்து இறங்கிய 3 பேர் கொண்ட மர்மகும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த அந்த நபர், ரத்த வெள்ளத்தில் சாலையில் சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார்.போலீஸ் நிலையம் அருகேயே நடுரோட்டில் நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தை கண்டு அங்கிருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணா நகர் போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல், ஆட்டோவில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

தி.மு.க. பிரமுகர்

படுகொலை செய்யப்பட்டவரின் தலை முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் அவர் யார்? என்பதை போலீசாரால் உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. அவர் ஓட்டி வந்த அவரது மொபட்டின் முன் பகுதியில் அவரது புகைப்படத்துடன், தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர் அண்ணாநகர் அடுத்த டி.பி.சத்திரம், 16-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் சம்பத்குமார் (வயது 48) என்பது தெரியவந்தது. மேலும் இவர், அந்த பகுதிகளில் தண்ணீர் கேன் போடும் தொழிலும் செய்து வந்தார். இவர், தி.மு.க. பொதுக்கூட்டங்களில் மேடை பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார்.

காரணம் என்ன?

நேற்று மாலை அண்ணா நகர் போலீஸ் நிலையத்துக்கு தனது மொபட்டில் சென்றபோது, ஆட்டோவில் வந்த மர்மகும்பல் சம்பத்குமாரை வழிமறித்து வெட்டிக்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிந்தது.அவரது கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. கொலையாளிகள் பிடிபட்டால்தான் காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com