தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் எதிரொலி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு பலத்த பாதுகாப்பு

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் எதிரொலி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு பலத்த பாதுகாப்பு
Published on

கன்னியாகுமரி,

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கியிருப்பதாகவும் மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் எதிரொலியாக சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் பகவதி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை, வெடிகுண்டை கண்டறியும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.

தீவிர ரோந்து

குமரி மாவட்டத்தில் 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள 48 கடற்கரை கிராமங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடிகளிலும் வாகன சோதனை நடந்து வருகிறது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் அதிநவீன ரோந்துபடகு மூலம் தீவிரமாக ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும் வகையில் யாரும் தங்கி இருக்கிறார்களா? என்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு தங்கி இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள கலங்கரைவிளக்கம், பஸ்நிலையம், ரெயில்நிலையம் மற்றும் முக்கியமான இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பகவதி அம்மன்கோவில், விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு வருபவர்கள் பெட்டி படுக்கைகள் மற்றும் கைப்பைகள் கொண்டு செல்லதடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் விடுதிகளிலும் சோதனை நடத்தினர். முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com