ஈரோட்டில் ஜவுளி, நகை கடைகளை 31-ந் தேதி வரை மூட வேண்டும் ஆர்.டி.ஓ. முருகேசன் உத்தரவு

ஈரோட்டில் ஜவுளி, நகை கடைகளை 31-ந் தேதி வரை மூட வேண்டும் என்று ஆர்.டி.ஓ. முருகேசன் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோட்டில் ஜவுளி, நகை கடைகளை 31-ந் தேதி வரை மூட வேண்டும் ஆர்.டி.ஓ. முருகேசன் உத்தரவு
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் பார்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. மேலும் ஜவுளிச்சந்தைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன.

இந்தநிலையில் ஜவுளிக்கடை, நகைக்கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒத்துழைப்பு

கொரோனா வைரஸ் பரவுதலை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. பேரிடர் என்பது பெரிய ஆபத்து என்று அர்த்தம். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. எனவே பொதுமக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த கூட்டத்தையே நாம் நடத்தக்கூடாது. இருந்தாலும், முக்கிய தகவல்களை பரிமாறி கொள்வதற்காக கூட்டம் நடத்தப்பட்டது.

நோயின் தன்மை தீவிரமாக இருப்பதால், ஒருவருக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டாலே 100 பேருக்கு உடனடியாக பரவி விடும். இதனால் உயிரிழப்பும் ஏற்படும். எனவே அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்போதுதான் நோய் பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்தலாம்.

கடைகள் மூட உத்தரவு

கடைகளை அடைத்தால் 10 நாட்கள் உங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை உணர முடிகிறது. அதேசமயம் இந்தியாவின் பொருளாதாரமே சரிந்து வரும் நிலையில், கொரோனா பரவுதலை தடுப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே கடைகளை அடைப்பதில் வணிகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படவில்லை. நோயின் தாக்கம் இருப்பது தெரியவந்தால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கு உள்ளது. நீண்ட நேரமாக காத்திருந்து பொருட்களை வாங்கும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. எனவே வருகிற 31-ந் தேதி வரை கடைகளை மூட வேண்டும். அவ்வாறு மூடப்படாத கடைகளின் மீது சீல் வைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமணம்

பொதுமக்கள் அதிகமாக கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோவில்களில் பொதுமக்கள் செல்வதையும் தவிர்க்கலாம். கடவுள் எல்லா இடங்களிலும் உள்ளார். பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா ஒத்திவைக்க ஒப்பு கொண்டதற்கு தலை வணங்குகிறேன். அவர்கள் உண்மை நிலையை ஏற்றுக்கொண்டார்கள். திருமணம் நடத்துவதையும் ஒத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து யாராவது ஈரோட்டிற்கு வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுவார்கள்.

இவ்வாறு ஆர்.டி.ஓ. முருகேசன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com