தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா

தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இருகையூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பழூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தர்ணா
Published on

தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தை சேர்ந்த இருகையூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி நிர்வாகத்தில் புறக்கணிக்கப்படுவதாக கூறி நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து இருகையூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கனிமொழி தலைமையில் வார்டு உறுப்பினர்கள் 7 பேர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாகவும், அவருடைய மகன் ஊராட்சி நிர்வாகத்தில் தலையிட்டு தன்னிச்சையாக செயல்படுவதாகவும், ஊராட்சி வரவு, செலவு கணக்குகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இவற்றையெல்லாம் மறைப்பதற்காக அவர் தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறி, ஊராட்சி நிர்வாகத்தில் தனது மகனை அனுமதித்த ஊராட்சி மன்ற தலைவர் மீதும், நிர்வாகத்தில் தலையிடும் அவருடைய மகன் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், தங்கள் பிரச்சினை தொடர்பாக மனுவாக எழுதி கொடுங்கள். அது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் தெரிவித்ததையடுத்து போராட்டம் நடத்திய உறுப்பினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் ஊராட்சி மன்றத் தலைவரும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் ஒன்றிய அலுவலக வளாகத்தில் போட்டி போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com