ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 48 பேர் ஜாமீனில் விடுவிப்பு

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது திருச்சியில் கைதான 48 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 48 பேர் ஜாமீனில் விடுவிப்பு
Published on

திருச்சி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அங்கம் வகிக்கும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நேற்று 5-வது நாளாக திருச்சியில் மறியல் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்டவர்களை திருச்சி கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்து பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்தனர்.

திருச்சி அருண் ஓட்டலில் உள்ள ஹால் ஒன்றில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் 74 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முசிறியை சேர்ந்த சந்திரசேகர் தலைமையில் 48 பேரை மட்டும் சிறையில் அடைக்கும் நோக்கத்தில் வாகனத்தில் ஏற்றிச்சென்று திருச்சி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு கவுதமன் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

மாஜிஸ்திரேட்டு, அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிடுவதற்கு பதிலாக, தனது சொந்த ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார். ஜாமீனில் விடுதலையான 48 பேர் மீதும் கல்வித்துறை அதிகாரியால், பணி இடைநீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கைதான ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரில் 270 பேர் திருச்சி கே.கே.நகர் சுந்தர்நகரில் உள்ள ஜகன்மாதா மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இரவு 8.30 மணிக்கு மேலாகியும் அங்கிருந்த ஆண்-பெண் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு போலீசார் குடிநீர் வசதி செய்து தரவில்லை என்றும், பசியால் இருக்கும் தங்களுக்கு சாப்பாடு வசதி செய்து கொடுக்கவில்லை என்றும் கூறி, அவர்கள் மண்டப வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தங்களிடம் இருந்த செல்போனில் உள்ள டார்ச்லைட்டை அடித்து கைகளில் உயர்த்தி பிடித்தவாறு அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். வேண்டும். வேண்டும் சாப்பாடு வேண்டும். அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என்பன உள்ளிட்ட கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இரவு 9.15 மணியளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com