கோவை அருகே நடந்த விபத்தில், மேலும் ஒரு சிறுவன் பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கோவை அருகே நடந்த விபத்தில் மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.
கோவை அருகே நடந்த விபத்தில், மேலும் ஒரு சிறுவன் பரிதாப சாவு - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
Published on

கோவை,

கோவையை அடுத்த குனியமுத்தூர் கரும்புக்கடையை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவருடைய மனைவி பைரோஸ் பேகம் (வயது 65). இவர் கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு 12 பேருடன் ஒரு வேனில் சென்றார். அந்த வேனை கோவை கரும்புக்கடையை சேர்ந்த முகமது ஷாஜகான் (30) ஓட்டினார்.

அவர்கள் பாலக்காடு சென்றுவிட்டு கோவை திரும்பினார்கள். கோவையை அடுத்த வாளையாறு பூலாம்பாறை என்ற இடத்தில் வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்ற கன்டெய்னர் லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேன் அப்பளம்போன்று நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனுக்குள் இருந்த பைரோஸ் பேகம், ரியான் (9), செரின் (13), ஆல்பா (7) மற்றும் வேனை ஓட்டிய முகமது ஷாஜகான் ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்து இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சஜூதா, மெகராஜ், பெனாசீர், நிஷா, இனியா பர்காஜ், முகமது ரிஸ்வான் (6), பரிதா ஆகிய 7 பேரையும் வாளையாறு போலீசார் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில் முகமது நிஷார் என்பவரின் மகன் முகமது ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பரிதாபமாக இறந்தான். இதன் மூலம் இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே சாலையோரத்தில் கனரக வாகனங்களை நிறுத்தி வைப்பதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், விபத்தில் இறந்தவர்களின் உடல் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கரும்புக்கடை பாரதி நகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இறந்தவர்களின் இறுதி சடங்கில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின் இறந்தவர்கள் உடல் பூமார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளிவாசல் மயானத்தில் அடக்கம் செய்யப் பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com