

திருச்சி,
லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பு வைத்து இருந்ததாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 11 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த நடவடிக்கையானது ஒரு தொடக்கம் தான். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி ஒரு தனி போலீஸ் படை விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் இல்லை என்றால் அவர்கள் பணியாற்றிய இடத்திற்கே திரும்ப செல்வார்கள். இந்த பிரச்சினையில் மேலும் அதிகாரிகள் சிக்குவார்களா? என்பது முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும். ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் யாரும் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை.
லக்னோவுக்கு தனிப்படை
கண்டோன்மெண்ட், பாலக்கரை, காந்திமார்க்கெட், கோட்டை போலீஸ் நிலையங்களில் குற்றப்பிரிவுக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு குற்றத்தடுப்பு பணிகளை கண்காணித்து வருகிறார்கள். செல்போன்களில் வங்கி கணக்கு எண் கேட்டது, ஆதார் எண் கேட்டது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாருக்கு இதுவரை 13 புகார்கள் வந்து உள்ளன. இதில் போலீசார் திறமையாக நடத்திய விசாரணையின் மூலம் இதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்காக ஒரு தனி போலீஸ் படை லக்னோவிற்கு சென்று உள்ளது. செல்போன் அழைப்புகள், ஆன்லைன் மூலம் செய்யப்படும் விளம்பரங்களை முழுமையாக நம்பி விடக்கூடாது.
போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது ரியல் எஸ்டேட் மோசடி புகார் தொடர்பான வழக்கு கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் விசாரணையில் உள்ளது. திருச்சி நகரில் தற்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக 27 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் உள்ளன. மேலும் 4 இடங்களில் சிக்னல்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டது, புத்தூர் பகுதியில் பெண்ணை கொலை செய்து நகையை கொள்ளையடித்தது உள்பட நிலுவையில் உள்ள வழக்குகளில் துப்பு துலக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருச்சி நகரில் மத்திய பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி அதிக அளவில் இருப்பதாக ஏராளமான புகார்கள் வருகின்றன. இதுபற்றி தனியாக ஒரு கூட்டம் நடத்தி போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.