வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.
வாக்குறுதிகளை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்
Published on

பேரையூர்,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை யொட்டி டி.கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

விழாவில் பெண்கள், முதியவர்கள், நலிந்தோர் ஆகியோருக்கு தையல் எந்திரம், கிரைண்டர், சலவைப் பெட்டி, சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

கிராமப்புறங்களில் சுய தொழில் செய்ய விரும்பும் பெண்கள் தங்களின் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினர் தேர்தல் காலத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல. எப்போதுமே மக்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தனர். அதை எல்லாம் அவர்கள் நிறைவேற்றி உள்ளார்களா? அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தனர். ஆனால் அ.தி.மு.க.வினரான நாங்கள் உங்கள் காலடியிலேயே சுற்றி சுற்றி வருகிறோம்.

தேர்தல் நேரம், 110 விதி, பொதுக்கூட்டம் என எந்த நேரத்தில் வாக்குறுதிகளை கொடுத்தாலும் சரி, கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார். எங்களையும், இஸ்லாமிய சகோதரர்களையும் பிரிக்க முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த பாதிப்பும் வராது. எனவே பொய் பிரசாரத்தை சிறுபான்மையின மக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வக்கீல் திருப்பதி, ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றியக்குழு தலைவர் டாக்டர் சண்முகப்பிரியா, ஒன்றிய குழு துணைத்தலைவர் முனியம்மாள், முன்னாள் ஒன்றியக் குழு துணைத்தலைவர் டாக்டர் பாவடியான், முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கரன், கல்லுப்பட்டி நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரையூர் நகர செயலாளர் நெடுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com