நியாய விலை கடைகளை மூடவேண்டும் என்பதே நோக்கம் சீமான் குற்றச்சாட்டு

சர்க்கரை விலையை உயர்த்தி இருப்பதன் மூலம் நியாய விலை கடைகளை மூடவேண்டும் என்பதுதான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம் என சீமான் குற்றம் சாட்டினார்.
நியாய விலை கடைகளை மூடவேண்டும் என்பதே நோக்கம் சீமான் குற்றச்சாட்டு
Published on

ஆலந்தூர்,

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

நியாய விலை கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. நியாய விலை கடைகளை மூடவேண்டும் என்பதுதான் உலக வர்த்தக அமைப்பின் நோக்கம். பெருமுதலாளிகளின் பொருட்களை விற்பனை செய்வதற்காகவே, ஏழைஎளிய மக்களுக்கு குறைவான விலையில் நியாய விலை கடைகளில் பொருள் கிடைப்பதற்கு தடை செய்ய முடிவு செய்து உள்ளனர்.

ரூ.25 கொடுத்து நியாய விலை கடையில் சர்க்கரையை வாங்குவதைவிட கடைகளுக்கு சென்று வாங்கிக்கொள்ளலாம் என்பதற்காக இந்த நடவடிக்கை. உலக வர்த்தக மையத்தில் கையெழுத்திட்டதால்தான் இந்த நிலைமை. உலக பொருளாதார மையத்தை ஏற்றுக்கொண்ட நாடு ஒருபோதும் வாழாது, வளராது.

நடிகர் கமல்ஹாசன் நேரிடையாக களத்துக்கு சென்று ஆய்வு செய்வது வரவேற்கத்தக்கது. இது சிறப்பான செயல் என்பதால் பாராட்டுகிறோம்.

தமிழிசை சவுந்தரராஜன் சொன்ன கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர் கருத்துகளை தெரிவித்தனர். கருத்து மோதலுக்கு கைகலப்பினால் தீர்வு காண முடியாது.

போராட்டம் நடத்தும் இடத்துக்கு சென்று தாக்குவது, காவல்துறை வாகனங்களில் ஏற்றிய பிறகும் சென்று தாக்குவது, இதை காவல்துறை எப்படி அனுமதிக்கிறது. இது அநாகரீகமானது. இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இனி இப்படிப்பட்ட செயல்கள் நிகழக்கூடாது.

கன்னியமான தலைவர்கள் வாழ்ந்த மாநிலம் தமிழகம். ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பண்பாடற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் 8ந்தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த போது அதை வரவேற்ற மு.க.ஸ்டாலின், தற்போது அதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்றதும் அந்த தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பதாக தெரிவிக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com