

வில்லியனூர்,
புதுச்சேரி வில்லியனூர் நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் வார்டு மணி என்கிற ராமகிருஷ்ணன்(வயது45). அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று இரவு 11.30 மணி அளவில் வில்லியனூர் புறவழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்த நிலையில் திடீரென்று வார்டு மணி மீது மோட்டார் சைக்கிளை மோதி தள்ளினர்.
இதில் வார்டு மணி நிலைகுலைந்து கீழே விழுந்தார். நிலைமையை அறிந்து சுதாரிப்பதற்குள் அங்கு பதுங்கி இருந்த ஒரு கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் வார்டு மணி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் தப்பி விடாமல் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி தள்ளியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் வார்டு மணி மயங்கி விழுந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
பிரேத பரிசோதனை
இது பற்றிய தகவல் அறிந்து வில்லியனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று வார்டு மணியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வார்டு மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின் பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வார்டு மணியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? ரியல் எஸ்டேட் தொழில்போட்டியில் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை நடந்த இடம் அருகே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.