

ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த போலீஸ் ஏட்டு ஒருவர் திருவோணம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்துக்கொண்டிருந்தபோது அவரது ஏ.டி.எம். கார்டு தவறி கீழே விழுந்தது. இதனை போலீஸ் ஏட்டு குனிந்து எடுப்பதற்கு முன்னர் அருகில் நின்றுக்கொண்டிருந்த வேறு ஒரு நபர் எடுத்து ஏட்டிடம் கொடுத்துள்ளார். இதனை பெற்றுக்கொண்டு ஏட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இதன் பிறகு சில தினங்களில் ஏட்டுவின் செல்போனுக்கு அவரது கணக்கிலிருந்து ரூ.60 ஆயிரம் வரையில் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஏட்டு ஏ.டி.எம்.மையத்திற்கு சென்று பாக்கி குறித்து விவரம் அறிய தன்னிடமிருந்த ஏ.டி.எம் கார்டை எடுத்து பார்த்தபோது அந்த கார்டு போலியானது என்று தெரியவந்தது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியபோது தவறி விழுந்த கார்டை எடுத்து கொடுத்த நபர் ஏட்டின் ஏ.டி.எம் கார்டை நூதன முறையில் எடுத்து விட்டு அவரிடம் போலி கார்டை கொடுத்துவிட்டு ஏமாற்றி சென்றது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும், வங்கியிலும் பாதிக்கப்பட்ட ஏட்டு புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஏட்டிடம் நூதன முறையில் ஏ.டி.எம் கார்டை திருடி பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.