பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் கடைகள் அடைப்பு-ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பாலக்கரை உள்பட பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் தங்களது கடைகளை அடைத்தும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர்கள் வாகனங்களில் அணி வகுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் கடைகள் அடைப்பு-ஆர்ப்பாட்டம்
Published on

திருச்சி,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று திருச்சி மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் (த.மு.மு.க.) கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு த.மு.மு.க.வின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் உதுமான் அலி தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் அப்துர் ரகீம் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் யாக்கூப் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் உச்சநீதி மன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றவியல் வழக்குகளில் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் அருள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருச்சி மாநகர செயலாளர் சுரேஷ், திராவிடர் கழக சொற்பொழிவாளர் புலிகேசி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். முடிவில் த.மு.மு.க.வின் திருச்சி மாவட்ட துணை செயலாளர் சிராஜுதீன் நன்றி கூறினார்.

இதே போன்று எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரட்டி பார்ட்டி ஆப் இந்தியா) கட்சி சார்பில் நேற்று திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சபியுல்லா தலைமை தாங்கினார். பொது செயலாளர் அப்துல்ரகீம் வரவேற்றுப்பேசினார். மாநில துணை தலைவர் ரபீக் அகமது கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் பாபர்மசூதி கட்ட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். முடிவில் மாவட்ட செயலாளர் ரபீக்முகமது நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருச்சி ஆழ்வார்தோப்பு, அரியமங்கலம், பாலக்கரை, நத்தர்ஷா பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் நேற்று தங்களது கடைகளை அடைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். திருச்சியில் பல்வேறு இடங்களில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து முஸ்லிம்கள் வாகனங்களில் வந்ததால் திருச்சி பாரதியார் சாலை, பாலக்கரை பிரபாத் ரவுண்டானா சாலை, காந்தி மார்க்கெட், மரக்கடை ராமகிருஷ்ணா பாலம், சத்திரம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் காலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதனை தொடர்ந்து போலீசார் மாற்று பாதையில் போக்குவரத்தை இயக்குவதற்கு நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com