சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் வாழை இலை வியாபாரம் பாதிப்பு

ஊரடங்கால் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், பொள்ளாச்சியில் வாழை இலை வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இலைகள் வெட்டப்படாததால் மரத்திலேயே கிழிந்து தொங்குவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் விடுகிறார்கள்.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் வாழை இலை வியாபாரம் பாதிப்பு
Published on

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி பகுதியில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தக்காளி, கத்திரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் பயிரிடப்படுகிறது. மேலும் தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக வாழை மரங்களும் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை இலைகளை விவசாயிகள் வெட்டி எடுத்து வந்து பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். ஏலம் எடுக்கும் வியாபாரிகள் கேரளாவிற்கும், பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் உணவகங்கள் மூடப்பட்டு உள்ளன. திருமணம், காது குத்து உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. இதனால் வாழை இலைகள் விற்பனை இல்லை. இதனால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மரத்தில் கிழிந்து தொங்கும் இலைகள்

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னையில் ஊடுபயிராகவும், தனியாகவும் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. வாழை இலைகளை வெட்டி கொண்டு வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்வோம். ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டு உள்ளது. இதற்கிடையில் உணவகங்கள் மூடப்பட்டு விட்டதாலும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாததால் வாழை இலை விற்பனை இல்லை.

இதனால் இலையை வெட்டாமல் வாழை மரத்தில் விட்டு உள்ளோம். அடிக்கடி பலத்த காற்று வீசுவதால் இலைகள் மரத்திலேயே கிழிந்து தொங்குகிறது. இதை பார்க்கும்போது கண்ணீர் விடுவதை தவிர வேறு வழியில்லை. விவசாய பணிகளுக்கு தடையில்லை என்று அரசு அறிவித்தாலும், வாழை இலை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். வாழை இலை வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

விற்பனை இல்லை

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் பழனிசாமி, கருப்பசாமி ஆகியோர் கூறியதாவது:-

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் வாழை இலை ஏலம் நடைபெறும். ஏலத்துக்கு ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி, கோவை அருகே உள்ள பேரூர், தொண்டாமுத்தூர், வெள்ளியங்கிரி மலை பகுதிகளில் இருந்து வாழை இலை கொண்டு வரப்படுகிறது. இதை தவிர தமிழக எல்லையொட்டி உள்ள கேரள பகுதிகளில் இருந்தும் ஏலத்துக்கு வாழை இலை கொண்டு வரப்படும். வழக்கமாக ஏலத்திற்கு 250 முதல் 300 கட்டு வாழை இலைகள் கொண்டு வரப்படும். ஒரு கட்டுக்கு 100 இலைகள் இருக்கும்.

ஊரடங்கு காரணமாக கேரள மாநில வியாபாரிகள் வராததாலும், உள்ளூரில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடைபெறாததாலும் வாழை இலை விற்பனை இல்லை.

ரூ.2 கோடி...

இதனால் விவசாயிகள் வாழை இலையை விற்பனைக்கு கொண்டு வராததால் ஏலம் நடைபெறுவதில்லை. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் தன்னார்வலர்களுக்கு விற்பனை செய்வதற்கு மட்டும் தினமும் ஒரு கட்டுகள் கொண்டு வரப்படுகிறது. வழக்கமாக முகூர்த்த நாட்களில் ஒரு கட்டு ரூ.500 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் ரூ.300 முதல் ரூ.700 வரை விற்பனை ஆகும். தற்போது ஒரு கட்டு ரூ.100-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பால் வாழை இலை தேக்கம் அடைந்து உள்ளது. இதனால் ரூ.2 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு உணவகங்கள் திறக்கப்பட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினால் மட்டுமே வாழை இலை விலை விற்பனை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com