

தஞ்சாவூர்,
காவிரி ஆற்றின் கிளை ஆறு கொள்ளிடமாகும். காவிரிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அதிக அளவு தண்ணீர் கொள்ளிடத்தில் தான் திறந்துவிடப்படும். சுமார் 4 லட்சம் கனஅடி தண்ணீரை கொள்ளும் என்பதால் கொள்ளிடம் ஆறு என இந்த ஆறு என பெயர் பெற்றது. திருச்சி அருகே மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரியில் இருந்தும், கல்லணையில் இருந்தும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். கர்நாடகத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அங்குள்ள அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன.
இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி தண்ணீர் பெருமளவில் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து 800 வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
முக்கொம்பில் இருந்தும் கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் இருகரைகளையும் தொட்டபடி கரைபுரண்டு செல்கிறது. தஞ்சை-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருவையாறு அருகே விளாங்குடிக்கும், திருமானூருக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் 1967-ம் ஆண்டு கட்டப்பட்டது.
தஞ்சையில் இருந்து அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள், கார் போன்ற வாகனங்கள் அனைத்தும் இந்த பாலத்தின் வழியாக தான் சென்று வருகிறது. இந்த பாலம் வலுவிழந்து வருகிறது. பாலத்தின் மையப்பகுதியில் மழைதண்ணீர் வடிவதற்காக போடப்பட்டுள்ள, சிறிய பாதை பகுதியில் சிமெண்டுகள் பெயர்ந்து காணப்படுகிறது. மேலும் தடுப்புச்சுவர்களில் சிமெண்டுகள் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் பலவீனமாக காணப்படுகிறது. சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து அப்படியே தொங்கி கொண்டு இருக்கிறது.
2 இடங்களில் சுமார் 10 அடி நீளத்துக்கு தடுப்புச்சுவர் முழுமையாக இடிந்துவிட்டது. இந்த இடத்தில் தற்காலிகமாக சிமெண்டு கற்களை வைத்து தடுப்புச்சுவர் அமைத்துள்ளனர். அந்த பகுதியில் மக்கள் சென்றுவிடாமல் இருப்பதற்காக இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் அதிகஅளவில் சென்று கொண்டிருப்பதால் தடுப்புச்சுவரை பிடித்து கொண்டு தான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே சீறிப்பாயும் தண்ணீரை பார்த்து வருகின்றனர். அந்த நேரத்தில் தடுப்புச்சுவர் இடிந்து பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.
இந்த பாலத்தின் வழியாக பஸ்கள், கார்கள் செல்லும்போது கூட அதிர்வுகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் கனரக வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் அதிர்வுகள் அதிகஅளவில் உள்ளது. பாலத்தில் நின்றால் இந்த அதிர்வுகளை உணர முடியும். கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்ட மணல் குவாரிகளுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வந்த லாரிகள், மணல் அள்ளிக் கொண்டு இந்த பாலத்தை கடந்து தான் சென்றன. தினமும் ஏராளமான லாரிகள் வந்து சென்றதால் தான் இந்த பாலத்தில் உறுதி தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
எனவே பாலத்தின் உறுதி தன்மையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் புதிய பாலம் கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.