தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய சக்தியாக உருவாகும் திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவாகும் என்று தமிழிசை சவுந்தரராஜன் திருச்சியில் கூறினார்.
தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய சக்தியாக உருவாகும் திருச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on

திருச்சி,

தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வலுப்படுத்த தீவிர உறுப்பினர் சேர்க்கை மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சியில் தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று திருச்சிக்கு வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, சட்டமன்ற தொகுதி மற்றும் வார்டுகளிலும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே, விரைவில் மிகப்பெரிய சக்தியாக பாரதீய ஜனதா கட்சி உருவெடுக்கும். வேலூரில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நடக்கிறது. மற்ற தேர்தல்களோடு வேலூர் தேர்தலை நடத்தாமல், வேலூருக்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தப்படுவதற்கு காரணம் தி.மு.க.தான். கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவிலேயே இடையில் வந்திருக்கிற ஒரே தேர்தல் வேலூருக்கு மட்டும்தான்.

பாரதீய ஜனதா மீது மக்கள் கோபமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுவது ஒரு மாயை ஆகும். மக்கள் கோபமாக இருப்பதாக இவர்களே ஒரு கற்பனை கதையை கூறி வருகிறார்கள். வேலூர் தேர்தல் மட்டும் மத்திய அரசிற்கு குறியீடு கிடையாது. மக்கள் முழுவதுமாக மத்திய அரசிற்கு ஆதரவு தெரிவித்து வருவதாலும் மற்ற மாநிலங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் கூட நாட்டிற்கு உகந்த கட்சி பாரதீய ஜனதா கட்சிதான் என தெரிவித்து, அவர்களே பா.ஜனதாவை நோக்கி வருகிறார்கள். பின்னர் எப்படி, மக்கள் பா.ஜனதாவுக்கு எதிராக இருப்பார்கள்?.

தமிழக பாரதீய ஜனதா கட்சி சார்பில் கர்நாடகாவில் புதியதாக பதவியேற்றிருக்கும் அரசிடம், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கோரிக்கை விடுக்கப்படும். தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதில் பாரதீய ஜனதா எப்போதும் பின்வாங்காது. நீட் தேர்வு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசியல் காரணங்களுக்காக சிலர், அவ்வாறு கூறி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சி சாலை ரோட்டில் உள்ள மண்டபம் ஒன்றில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாநில தீவிர உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் அரசக்குமார், திருச்சி மாவட்ட பா.ஜனதா தலைவர் தங்க.ராஜைய்யன், இளைஞர் அணியை சேர்ந்த கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com