பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாட்டு வண்டிகளில் வந்து த.மா.கா.வினர்

பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி கோவையில் த.மா.கா. வினர் மாட்டு வண்டிகளில் வந்து கலெக்டரிடம் மனுகொடுத்தனர்.
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாட்டு வண்டிகளில் வந்து த.மா.கா.வினர்
Published on

கோவை,

தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் அதை உடனே ரத்து செய்ய வலியுறுத்தியும் நூதன போராட்டம் நடத்தினர் இதற்காக த.மா.கா. நிர்வாகிகள் கோவை ஆடீஸ் வீதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 4 மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக வந்தனர்.

இதற்கு மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமை தாங்கினார். த.மா.கா. மாநகர் மாவட்ட தலைவர் வி.வி.வாசன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அவர்கள் ஆடீஸ் வீதி, உப்பிலிபாளையம் சிக்னல், பழைய தபால் நிலைய ரோடு வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாட்டு வண்டிகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதி கொடுக்கவில்லை என்பதால், அலுவலகத்துக்கு வெளியே மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு, அவர்கள் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து மனு கொடுத்தனர்.

பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் போலி அரசு தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. பஸ் கட்டண உயர்வால் நடுத்தர, ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு ரோட்டுக்கு வந்து போராட்டம் செய்கிறார்கள். ஆனால் அதை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இதுகுறித்து கேட்டால் கஜானாவில் பணம் இல்லை என்பதால் பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளோம் என்று கூறுகிறார்கள். கஜானாவில் பணம் இல்லை என்றால், எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் எப்படி அதிக சம்பளம் கொடுக்க பணம் இருக்கிறது என்பது குறித்து தமிழக முதல்- அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி த.மா.கா. சார்பில் வருகிற 29-ந் தேதி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போராட்டத்தில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் அருண் ஈஸ்வரன், மாவட்ட தலைவர்கள் கார்த்திக் கண்ணன் (கோவை மாநகர் தெற்கு மாவட்டம்), பொள்ளாச்சி மணிகண்டன் (கோவை புறநகர் தெற்கு மாவட்டம்), ஆனந்த குமார் (கோவை புறநகர் வடக்கு மாவட்டம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com