ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட நெல்லையை சேர்ந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
Published on

பனவடலிசத்திரம்,

சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் துளைபோட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை பிடிக்க மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் மற்றும் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் ராமாவாஸ் கிராமத்தில் கொள்ளை கும்பல் தலைவன் நாதுராம் மற்றும் அவனது கூட்டாளிகளை பிடிக்க சென்றபோது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து குஜராத் மாநிலம், ஆமதாபாத்துக்கு விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவருடைய உடல் விமானம் மூலம் நேற்று சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

பழைய விமான நிலையத்தில் உள்ள 5-வது நுழைவு வாயில் பகுதியில் சிறிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. அதில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உருவப்படம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் பெரியபாண்டியனின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டது. அவருடைய உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டது.

பின்னர் போலீசார் துப்பாக்கியை ஏந்தியபடி அணிவகுப்பு நடத்தி இசை முழக்கத்துடன் மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் கையில் கருப்பு பட்டை அணிந்தபடி வந்து பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அவர்களை தொடர்ந்து, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி மற்றும் போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு நேரில் வந்து அவருடைய உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சாவுக்கு காரணமான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொலைகாரனை உடனடியாக கைது செய்து தமிழகத்துக்குக் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியுடன் உடனடியாக பேசி, அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பெரியபாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய அவர், பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ், தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மாலை 5 மணி வரை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் பழைய விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அதன் பின்னர் அவருடைய உடல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மதுரையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக இன்ஸ்பெக்டரின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தேவர்குளம் சாலைப்புதூர் கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

அங்கு இரவு 11 மணி அளவில் பெரியபாண்டியனின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலுக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பெரியபாண்டியனின் உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், போலீசார், பொதுமக்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு பெரியபாண்டியனின் உடல் அங்கிருந்து ஊர்வலமாக கல்லறை தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் மனைவி பானுரேகா, தாயார் ராமாத்தாய் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ராணுவத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு உயரிய விருது வழங்கப்படுவது போல் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பெரியபாண்டியனுக்கு ஜனாதிபதி விருது வழங்க வேண்டும். அவர் தானமாக நிலம் கொடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். அவரது 2 மகன்களுக்கும் காவல் துறையில் வேலை வழங்க வேண்டும் என்றார்.

மூவிருந்தாளி இளைஞர் மன்றம் சார்பில் மூவிருந்தாளியில் இருந்து சாலைப்புதூருக்கு அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் ஊர்வலத்தின்போது, பெரியபாண்டியன் தானமாக நிலம் கொடுத்த பள்ளிக்கூடத்துக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர். பின்னர் அவர்கள் பெரியபாண்டியனின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com