மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த திருப்பதியை சேர்ந்த பள்ளி மாணவியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த பள்ளி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
Published on

வேலூர்,

சித்தூர் மாவட்டம் வைகுண்டபுரம் ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சைலஜா. இவர்களுக்கு லிகிதா (வயது 12) மற்றும் மகிதா (9) என்ற இருமகள்கள் உள்ளனர். லிகிதா அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். லிகிதா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்தநிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமானது. இதையடுத்து லிகிதாவை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த 12-ந் தேதி சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், நேற்று காலை 8 மணி அளவில் சிகிச்சை பலனின்றி லிகிதா மூளைச்சாவு அடைந்தார்.

இதையடுத்து லிகிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். அதைத்தொடர்ந்து லிகிதாவின் கல்லீரல், 2 சிறுநீரகம், இதயம், நுரையீரல் ஆகியவற்றை டாக்டர்கள் குழுவினர் நவீன தொழில்நுட்ப உதவியுடன் உரிய பாதுகாப்புடன் அறுவை சிகிச்சை மூலம் எடுத்தனர்.

இதில் கல்லீரல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், கண்கள் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை எஸ்.ஆர்.எம்.சி. மருத்துவமனைக்கும், நுரையீரல் சென்னை குளோபல் மருத்துவமனைக்கும் தானமாக பெறப்பட்டது.

மேலும் இதயம் சென்னை போர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கு தானமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அது சரியாக இயங்கவில்லை. எனவே இதனை பிறருக்கு பொருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கல்லீரல், ஒரு சிறுநீரகம், நுரையீரல் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அந்தந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com