தர்மபுரியில் முதல்முறையாக 50 அரங்குகளுடன் புத்தக திருவிழா - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்

தர்மபுரியில் முதல்முறையாக 50 அரங்குகளுடன் நடைபெறும் புத்தக திருவிழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
தர்மபுரியில் முதல்முறையாக 50 அரங்குகளுடன் புத்தக திருவிழா - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
Published on

தர்மபுரி,

தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் புத்தகதிருவிழா தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது. புத்தக திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். புத்தக திருவிழாவின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செந்தில் வரவேற்றார். உதவி கலெக்டர் சிவன்அருள், தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து புத்தகங்களை பார்வையிட்டார்.

முதல் விற்பனையை டாக்டர் பெருமாள் தொடங்கி வைக்க முதல் புத்தகத்தை அனைத்து வணிகர் சங்க தலைவர் வைத்திலிங்கம் பெற்றுக்கொண்டார். விழாவில் அமைச்சர் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் முதல் முறையாக பிரமாண்டமான முறையில் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் 50 அரங்குகளில் 500-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தக திருவிழாவை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்று வீட்டுக்கு ஒரு புத்தகமாவது வாங்கி பயன்பெற வேண்டும், என்று பேசினார்.

இந்த விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, மாவட்ட நூலக அலுவலர் கார்த்திகேயன், கல்லூரிக்கல்வி இயக்கக இணை இயக்குனர் சகுந்தலா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் நகராட்சி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் கந்தசாமி, பி.சி.ஆர்.பள்ளி தாளாளர் பி.சி.ஆர்.மனோகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தகடூர் புத்தகபேரவை தலைவர் சிசுபாலன் நன்றி கூறினார்.

இந்த புத்தக திருவிழா வருகிற 12-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. தினமும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. இதில் தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள். புத்தக திருவிழாவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக தர்மபுரி பஸ்நிலையத்தில் இருந்து தினமும் இலவச பஸ்கள் இயக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com