

கன்னியாகுமரி,
இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரி முக்கடல் சங்கமிங்கும் பகுதியாகவும், சிறந்த சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள இரண்டு பிரமாண்ட பாறைகளில் ஒன்றில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொன்றில் உலகப் பொதுமறையை தந்த திருவள்ளுவரின் 133 அடி உயர சிலையும் அமைந்துள்ளன.
விவேகானந்தர் மண்டபம் குறித்து சில ஆன்மிக தகவலும், வரலாற்று தகவலும் உள்ளன. தற்போது விவேகானந்தர் மண்டபம் அமைந்திருக்கும் பாறையில் ஒற்றைக்காலில் நின்றபடி பகவதி அம்மன் சிவபெருமானை வேண்டி தவம் புரிந்ததாக நம்பப்படுகிறது. அந்த பாறையில் ஒற்றைக்கால் பாதம் பதிந்தும் இருக்கிறது. அந்த பாதத்தை பார்த்து தியானம் செய்வதற்காகத்தான் கொல்கத்தாவில் இருந்து சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி கன்னியாகுமரி வந்தார். அவர் தன்னந்தனியாக கடலில் நீந்திச் சென்று 3 நாட்கள் அந்த பாறையில் தியானம் செய்தார். பின்னர் அவர் அமெரிக்காவில் சிகாகோ நகருக்கு சென்று உரையாற்றினார். அந்த உரை பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடல் சீற்றம்
கன்னியாகுமரி கடலின் நடுவில் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்த பாறையில், பிற்காலத்தில் அவரது நினைவை கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964-ம் ஆண்டில் அந்த பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது. 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி 1970-ம் ஆண்டு நிறைவு பெற்றது. அந்த ஆண்டு செப்டம்பர் 2-ந் தேதி விவேகானந்தர் மண்டபத்தை அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். விவேகானந்தர் நினைவு மண்டபம் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளது.
அதன் அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தாங்கி நிற்கும் பாறையானது ஏக்கர் பரப்பளவு கொண்டது. திருவள்ளுவர் சிலை கடந்த 2000-வது ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிடுகிறார்கள். ஆனால், அடிக்கடி நிகழும் கடல்சீற்றம், கடல் உள்வாங்குதல், நீர்மட்ட தாழ்வு போன்ற இயற்கை மாற்றங்களின் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கடி படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. விவேகானந்தர் மண்டபம் வரையே படகுகள் இயக்கப்படுகின்றன.
இணைப்பு பாலம்
இதனால் திருவள்ளுவர் சிலைக்கு அருகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், தமிழ் அமைப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முயற்சியால் மத்திய சுற்றுலா துறை மந்திரி மகேஷ்சர்மா கன்னியாகுமரிக்கு வந்து சுற்றுலா தலங்களின் மேம்பாடு குறித்து ஆய்வு செய்தார். அப்போது மத்திய மந்திரி மகேஷ்சர்மாவிடம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ரூ.15 கோடி
அதன் அடிப்படையில் மத்தியஅரசின் சுற்றுலாத்துறை செயல்படுத்திவரும் கடற்கரை சுற்றுலா பகுதிகளை மேம்படுத்தும் திட்டமான சுவதேஷ் தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள சில சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக மத்திய சுற்றுலா துறை தமிழ்நாட்டுக்கு ரூ.100 கோடியை ஒதுக்குவதற்கான ஒப்புதலை வழங்கி உள்ளது. அந்த திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே புதிய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலம் ரூ.15 கோடி செலவில் அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
கடல் நடுவில் அமையும் நடைபாலம் 95 மீட்டர் நீளத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 7 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்படுகிறது. 8 ராட்சத தூண்களை கடலுக்குள் அமைத்து, இந்த பாலம் உருவாக்கப்படுகிறது.
விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இந்தபாலம் அமைக்கப்படுவதன் மூலம் இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களிலும் எந்த தடங்கலும் இன்றி திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.