கரப்பான் பூச்சி கிடந்ததாக கூறி பிரியாணி கடை மேலாளரை மிரட்டிய 3 பேர் கைது

கரப்பான் பூச்சி கிடந்ததாக கூறி பிரியாணி கடை மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
கரப்பான் பூச்சி கிடந்ததாக கூறி பிரியாணி கடை மேலாளரை மிரட்டிய 3 பேர் கைது
Published on

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு அயப்பாக்கத்தை சேர்ந்த சந்திரன் (வயது 44), கன்னியாகுமரியை சேர்ந்த மணிகண்டபிரசாத் (35) ஆகியோர் அந்த கடையில் பிரியாணி மற்றும் சிக்கன் திக்கா வாங்கி சாப்பிட்டனர்.

அப்போது சிக்கன் திக்காவில் கரப்பான் பூச்சி கிடப்பதாக கூறி, இருவரும் தங்கள் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அதன்பேரில் ராஜூவ் (46), கார்த்திக், மோகன் ஆகிய மேலும் 3 பேர் அங்கு வந்தனர். பின்னர் 5 பேரும் சேர்ந்து, பிரியாணி கடை மேலாளரிடம் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதில் கார்த் திக், தான் ஒரு பத்திரிகை யாளர் என்றும், இதுபோன்று தரமற்ற உணவுகளை தயாரிப்பதாக கூறி செய்தி வெளியிடுவேன் என்றும், அப்படி செய்தி வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு பிரியாணி கடை மேலாளர் மற்றும் ஊழியர்களை மிரட்டியதுடன், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களையும் சாப்பிட விடாமல் வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சந்திரன், மணிகண்டபிரசாத், ராஜூவ் ஆகிய 3 பேரையும் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். கார்த்திக், மோகன் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

கைதான 3 பேர் மீதும் மிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக், மோகன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com