

பாபநாசம்,
தஞ்சை அருகே உள்ள கரந்தை மேலக்குருவிக்கார தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் ராஜேஷ்(வயது22). பி.பி.ஏ. படித்துள்ள இவர் மினிபஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரும் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்த வீரராசு மகள் அபிநயா(22) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை அபிநயா வெளியில் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு பாபநாசத்துக்கு சென்றார். கரந்தையில் இருந்து ராஜேசும் பாபநாசத்துக்கு வந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து மணக்கோலத்தில் பாபநாசம் தாலுகா அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள துர்க்கையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு ராஜேசும், அபிநயாவும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தகவல் அபிநயாவின் குடும்பத்துக்கு தெரிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுமார் 10 பேருடன் கார், மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாட்டில் இருந்து பாபநாசத்துக்கு வந்தனர்.
தாக்குதல்
திருமணத்துக்கு பின் ராஜேசும், அபிநயாவும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது பாபநாசத்தை அடைந்த அபிநயாவின் உறவினர்கள் மணக்கோலத்தில் இருந்த அபி நயாவை கண்டு ஆத்திர மடைந்து அபிநயா மற்றும் ராஜேசை உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். ராஜேசின் பட்டு வேட்டி- சட்டையை கிழித்து எரிந்தனர். மேலும் அருகே இருந்த ராஜேசின் அண்ணன் தினேசின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகே பட்டப் பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஏராளமானோர் கூடினர்.
வழக்குப்பதிவு
திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலால் நிலைகுலைந்த காதல் ஜோடியினர் இந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடி அருகே இருந்த பாபநாசம் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்தனர். தலைவிரி கோலத்தில் பெண்ணும் ஆடைகள் கிழிந்த நிலையில் வாலிபர் ஒருவரும் திடீரென போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்ததால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து நடந்த விவரங்களை கேட்டனர். அப்போது காதல் ஜோடியினர் தங்களுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்ததையும் தாங்கள் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கப்பட்டதையும் கூறினர். இது குறித்து பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு காதல் திருமண ஜோடியிடம் விசாரணை நடத்தினர். அப்போது ராஜேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தன்னை தாக்கியவர்கள் ஜாதியின் பெயரை கூறி தன்னை திட்டியதாக கூறி உள்ளார். இதன்பேரில் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் காதல் திருமண ஜோடி ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.