வெள்ளியணையில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் கடைகள் அடைப்பு

வெள்ளியணையில் இருதரப்பு இளைஞர்கள் இடையே ஏற்பட்ட பயங்கர மோதலால் கடைகள் அடைக்கப்பட்டது.
வெள்ளியணையில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் கடைகள் அடைப்பு
Published on

வெள்ளியணை,

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில் திருவிழாவின்போது இரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் பிரச்சினை உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டதால், இருசமூகத்தை சேர்ந்த பெரியவர்களும் போலீசார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தனர். ஆனாலும் இருசமூக இளைஞர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படாத நிலைமையே இருந்து வந்தது. இதனால் இருசமூகத்தை சேர்ந்த இளைஞர்களில் சிலர் முகநூலில் ஒருவரை ஒருவர் தாக்கி பதிவிட்டு பகையை வளர்த்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முகநூல் பதிவில் ஈடுபட்ட இருவேறு சமூக இளைஞர்களும் வெள்ளியணை கடைவீதியில் சந்தித்து கொண்டபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு, கடைவீதி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலையே நிலவியது.

கடைவீதியில் கடைக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் இளைஞர்கள் நடந்து கொண்டனர். இதனால் அச்சம் அடைந்த வியாபாரிகள் எப்போதும் கடைகளை திறக்கும் நேரமான காலை 6 மணிக்கு கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடக்காமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை இரு சமூகத்தை சேர்ந்த பெரியவர்களும் இளைஞர்களும் வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனையடுத்து குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்பராஜா, இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் மற்றும் போலீசார் இரு சமூக பெரியவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபடாமல் இருக்க அறிவுறுத்துவதாகவும், இரு சமூக மக்களும் நட்புணர்வுடன் இருக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது .இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் போலீசார், கடைகளை திறக்க வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் காலை 11 மணி அளவில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வியாபாரம் நடைபெற்றது. இந்த திடீர் கடையடைப்பால் சுற்றுப்பகுதி ஊர்களில் இருந்து பொருட்கள் வாங்க வெள்ளியணைக்கு வந்தவர்கள் முதலில் ஏமாற்றமடைந்தனர். பின்னர் கடைகள் திறக்கப்பட்டதை அறிந்து பொருட்களை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை பதற்றமான சூழ்நிலை நிலவி, பின்னர் குறைந்தது .இருப்பினும் போலீசார் தொடர்ந்து கடைவீதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com