

தகராறு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான் (வயது 40). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் 1999-ம் ஆண்டு முதல் வேலை செய்து வந்தார். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலே சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார்.இவருடைய உறவினர்களான புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு கொஞ்சி அடைக்கான் (50). அவருடைய மனைவி சித்ரா (47) மற்றும் அவரது குடும்பத்தினரை கடந்த 2009-ம் ஆண்டு அழைத்து வந்து ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள வீட்டில் தங்க
வைத்துள்ளார்.அப்போது சித்ராவுக்கும், கொஞ்சி அடைக்கானுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது தொடர்பாக சித்ராவுக்கும், அவரது கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. சித்ராவிடம் இருந்து பிரிந்து சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கே கொஞ்சி அடைக்கான் சென்று விட்டார்.
கணவர் மாயம்
இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கொஞ்சி அடைக்கானுக்கு, அவரது பெற்றோர், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனியம்மாள் (34) என்பவருடன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து வைத்தனர். அவர்கள் காஞ்சீபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் தனுஷியா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த 3-8-2019 அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தனது கணவரை காணவில்லை என்று பழனியம்மாள், காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி
வந்தனர். தன்னுடைய கணவர் மாயமானது குறித்து பழனியம்மாள் போலீஸ் அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு மண்டல ஜ.ஜி. சங்கரை சந்தித்து தனது கணவர் மாயமானது குறித்து மனு அளித்தார். அதன்பேரில் போலீஸ் அதிகாரிகளுக்கு ஜ.ஜி. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இது தொடர்பாக சோமங்கலம் போலீசார் சித்ரா (47), எழுமலை, (35), ரஞ்சித்குமார் (30), டார்ஜன் (33), விவேகனந்தன் (30), ஆகியோரை பிடித்து
விசாரித்தனர்.
கிணற்றில் உடல் வீச்சு
போலீஸ் விசாரணையில், தனியார் நிறுவன ஊழியர் கொஞ்சி அடைக்கானை கொலை செய்து இரும்பு பீப்பாயில் சிமெண்டு கலவையுடன் கலந்து படப்பை அடுத்த மலைப்பட்டு பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் வீசி உள்ளது தெரியவந்தது. இதையடுத்து மலைப்பட்டு பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
குன்றத்தூர் தாசில்தார் லட்சுமி, டாக்டர்கள் முன்னிலையில் விவசாய கிணற்றில் இருந்து நீரை வெளியேற்றி இரும்பு டிரம்மில் அடைத்து வைக்கப்பட்ட உடலை வெளியே எடுத்தனர். இரும்பு டிரம்மை வெல்டிங் எந்திரம் மூலமாக பிளந்து அதில் இருந்த எலும்புகளை எடுத்து ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.