பஸ் டயர் வெடித்ததில் மாணவி படுகாயம் மாணவ-மாணவிகள் போராட்டம்

கேளம்பாக்கம் அருகே கல்லூரி பஸ் டயர் வெடித்ததில் மாணவி படுகாயம் அடைந்தார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து சக மாணவ-மாணவிகள் கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் டயர் வெடித்ததில் மாணவி படுகாயம் மாணவ-மாணவிகள் போராட்டம்
Published on

திருப்போரூர்,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பேராசிரியர் தனபாலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த அமுதா(வயது 20) என்ற மாணவி, 3-ம் ஆண்டு மைக்ரோ பயாலஜி பயின்று வருகிறார்.

கடந்த சனிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து, மாணவி அமுதா கல்லூரி பஸ்சில் வீட்டுக்கு திரும்பினார். கேளம்பாக்கம்-வண்டலூர் சாலையில் புதுப்பாக்கம் என்ற இடத்தில் வந்தபோது, திடீரென கல்லூரி பஸ்சின் பின்பக்க டயர் வெடித்தது.

இதில் பஸ்சின் உள்ளே இருக்கைக்கு அடிப்பகுதி நொறுங்கியது. டயர் வெடித்த வேகத்தில், இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்ட மாணவி அமுதாவின் கால்கள், பஸ்சில் சேதம் அடைந்து இருந்த இடிபாட்டுக்குள் சிக்கிக்கொண்டது.

இதில் அவரது காலின் ரத்தநாளம் துண்டாகி, ரத்தம் கொட்டியது. உடனடியாக அவரை கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து நேற்று காலை கல்லூரிக்கு வந்த சக மாணவ-மாணவிகள், அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்ததும் வகுப்பறைக்கு செல்லாமல் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து, கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், கல்லூரி பஸ்களை முறையாக பராமரிக்காமல் இயக்கப்படுகிறது. கல்லூரியில் குடிநீர், கேண்டின் வசதி, கட்டிட வசதி எதுவும் இல்லை. ஆண்-பெண் என இருபாலரும் படிக்கும் நிலையில் கல்லூரியின் பெயர் பெண்கள் கல்லூரி என ஆவணங்களில் வழங்கப்படுகிறது. அதனை மாற்றி இருபாலர் கல்லூரி என மாற்ற வேண்டும். கல்லூரிக்கு கட்டணம் கட்டினால் உரிய முறையில் ரசீது வழங்குவது இல்லை என கல்லூரி நிர்வாகத்தின் மீது சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

கல்லூரி மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த கேளம்போக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com