

நிலக்கோட்டை:
நம்பிக்கையில்லா தீர்மானம்
நிலக்கோட்டை ஒன்றியத்தில் மொத்தம் 20 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி தேர்தலில் 10 வார்டுகளை அ.தி.மு.க.வும், 1 வார்டை பா.ம.க.வும், 7 வார்டுகளை தி.மு.க.வும், 2 வார்டுகளை சுயேச்சைகளும் கைப்பற்றினர். இதையடுத்து பா.ம.க. கவுன்சிலர்கள் ஆதரவுடன் அ.தி.மு.க., ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றியது. அதன்படி, ஒன்றியக்குழு தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ரெஜினா நாயகமும், துணைத்தலைவராக யாகப்பனும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும் இதுதொடர்பாக திண்டுக்கல் ஆர்.டி.ஓ.விடம் மனு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு மற்றும் ஆலோசனை கூட்டம், நிலக்கோட்டை ஒன்றியக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. காசிசெல்வி தலைமை தாங்கினார். இதில், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் உள்பட 20 கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.
மறியலுக்கு முயற்சி
பின்னர் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக முடிவுகள் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்.டி.ஓ. காசி செல்வி மற்றும் அலுவலர்கள் வாக்கு பெட்டியை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். வாக்கெடுப்பு தொடர்ந்து நடைபெறவில்லை. தி.மு.க. கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கிடையே வாக்கெடுப்பு நடத்தவிடாமல் தடுத்ததாக தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் தேன்மொழி சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் நிலக்கோட்டை பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அ.தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நிலக்கோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.