சென்னை தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கேக் இல்லை என்றதால் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்; ஷட்டரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பரபரப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கேக் இல்லை என்றதால் பேக்கரி கடை உரிமையாளர் மற்றும் ஊழியரை சரமாரியாக தாக்கிய கும்பல், மறுநாள் கடையின் ஷட்டரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
சென்னை தாம்பரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கேக் இல்லை என்றதால் உரிமையாளரை சரமாரியாக தாக்கிய கும்பல்; ஷட்டரில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் பரபரப்பு
Published on

பேக்கரி கடை

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம், கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 30). இவர், சுத்தானந்த பாரதி தெருவில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த ஒரு கும்பல் புத்தாண்டு கொண்டாட கேக் கேட்டனர். ஆனால் கடையை மூடுவதற்கு நேரமாகி விட்டதால் கேக் இல்லை என பேக்கரி உரிமையாளர் முருகன் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், முருகனுடன் வாக்குவாதம் செய்தனர்.

சரமாரி தாக்குதல்

இதில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் முருகனை கடையில் இருந்து வெளியே இழுத்துபோட்டு சரமாரியாக தாக்கினர். இதனை தடுக்க முயன்ற கடை ஊழியரையும் தாக்கினர். பின்னர் இருவரும் கடைக்குள் சென்று ஷட்டரை மூடிக்கொண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த முருகன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தீ வைத்தனர்

இதற்கிடையே அந்த கும்பல் நேற்று காலை மீண்டும் முருகனின் பேக்கரி கடைக்கு வந்து, கடையின் ஷட்டரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.

பின்னர் போலீசார் தேடுவதை அறிந்த அந்த கும்பல் அவர்களாகவே முன்வந்து சேலையூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து இரும்புலியூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த பிலிப்ஸ் கிளமெண்ட் (19), கணபதிபுரம் பகுதியை சேர்ந்த லோகேஷ் (19), மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த தனுஷ் (19) மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com