டெல்லியில் மர்ம மரணம் அடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு திருப்பூரில் அனைத்து கட்சியினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.
டெல்லியில் மர்ம மரணம் அடைந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
Published on

திருப்பூர்,

டெல்லியில் மர்மமான முறையில் இறந்த திருப்பூர் பாரப்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபுவுக்கு அனைத்து கட்சியினர் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார்.

டி.கே.டி.மு.நாகராஜன், மேங்கோ பழனிசாமி, ராஜ்மோகன்குமார், ராமதாஸ்(தி.மு.க.), கிருஷ்ணன்(காங்கிரஸ்), ரவி(இந்திய கம்யூனிஸ்டு), ராஜகோபால்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சிவபாலன்(ம.தி.மு.க.), ரவிக்குமார், மோகன்கார்த்திக்(த.மா.கா.), ஆறுமுகம்(திராவிடர் கழகம்), குமார்(ஆம் ஆத்மி கட்சி), ஈஸ்வரன்(பெருந்தலைவர் மக்கள் கட்சி), தொழில் துறையினர் சார்பில் அகில் ரத்தினசாமி, எம்பரர் பொன்னுசாமி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு

நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் சரத்பிரபுவுக்கு இரங்கல் தெரிவித்து பேசினார்கள். நிகழ்ச்சியில், மருத்துவ மாணவர் சரத்பிரபு இறந்த சம்பவத்தை கொலை என்று கருதுகிறோம். எனவே கொலை வழக்காக பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சர், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வெளிமாநிலங்களுக்கு மேற்படிப்பு படிக்க செல்லும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் இரவு 7 மணி அளவில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ரோட்டின் இருபுறமும் நின்று சரத்பிரபுவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முடிவில் சரத்பிரபுவின் உறவினர் ஜெயகாந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார். இதில் வணிகர்கள் சிலர் தங்கள் கடைகளை அடைத்து வந்து அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com