

நாசிக்,
நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரகுமார்(வயது51). இவரது மனைவி வந்தனா(45). இந்த தம்பதிக்கு ஹர்த்திக்(20), ஹிமான்சு(19) ஆகிய 2 மகன்கள்.
மகேந்திர குமார் தனது மனைவி, மகன்களுடன் காரில் மாலேகாவ் சென்றிருந்தார். இந்தநிலையில் அவர்கள் நேற்று காரில் நாசிக் திரும்பி கொண்டிருந்தனர். காரை மகேந்திரகுமார் ஓட்டி வந்தார்.
நாசிக் சந்த்வட் பகுதியில் வந்தபோது, திடீரென காரின் ஒரு டயர் வெடித்தது. இதில், மகேந்திரகுமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியபடி சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு பஸ்சின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார், பஸ்சின் அடிப்பகுதியில் புகுந்தது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த மகேந்திரகுமார், அவரது மனைவி வந்தனா, மகன் ஹிமான்சு ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்கள். ஹர்த்திக் படுகாயம் அடைந்தார்.
இந்த பயங்கர விபத்தை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் பிணமாக கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹர்த்திக் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.