தடுப்புக்கட்டையில் மோதி சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டது

நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரெயில் என்ஜின் புதுச்சத்திரம் ரெயில் நிலையத்தில் தடுப்புக்கட்டையில் மோதி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தடுப்புக்கட்டையில் மோதி சரக்கு ரெயில் என்ஜின் தடம் புரண்டது
Published on

பரங்கிப்பேட்டை,

புதுச்சத்திரம் அருகே புதுகுப்பம் கிராமத்தில் தனியார் அனல் மின்நிலையம் உள்ளது. இந்த அனல் மின்நிலையத்துக்கு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலம் நிலக்கரி கொண்டு வரப்படுகிறது.

இந்த சரக்கு ரெயில் புதுச்சத்திரம் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், அங்கு வேறொரு என்ஜின் பொருத்தப்பட்டு 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் அனல் மின்நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுவது வழக்கம்.

அதன்படி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு புதுகுப்பம் அனல்மின் நிலையத்துக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு புதுச்சத்திரம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு என்ஜினை மாற்றுவதற்காக ரெயில் நிலையத்தில் உள்ள தனி தண்டவாளத்தில் சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டது.

பின்னர் டிரைவர், சரக்கு பெட்டிகளுடன் இணைக்கப்பட்டிருந்த என்ஜின் இணைப்பை துண்டித்து என்ஜினை மட்டும் தனியாக பிரித்தார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த என்ஜின், எதிர்பாராதவிதமாக தண்டவாளம் முடியும் இடத்தில் இருந்த தடுப்பு கட்டை மீது மோதியது. இதில் அந்த தடுப்புக்கட்டை உடைந்தது. இதனால் என்ஜின் தடம் புரண்டு ஓடியதில் தண்டவாளத்தில் அமைத்திருந்த சிலிப்பர் கட்டைகள் உடைந்தது.

உடனே சுதாரித்துக்கொண்ட டிரைவர் சாமர்த்தியமாக என்ஜினை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில் நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து, தடம் புரண்ட ரெயில் என்ஜினை பார்வையிட்டனர்.

பின்னர், விழுப்புரத்தில் இருந்து விபத்து மீட்பு பொருட்கள் அடங்கிய என்ஜின் கொண்டு வரப்பட்டது. அதன் உதவியுடன் தடம்புரண்ட சரக்கு ரெயில் என்ஜின் மீட்கப்பட்டது.

இதற்கிடையில் சரக்கு ரெயிலில் புதிய என்ஜின் பொருத்தப்பட்டது. பின்னர் நிலக்கரி இருந்த சரக்கு ரெயில் புதுச்சத்திரத்தில் இருந்து புதுக்குப்பம் தனியார் அனல் மின்நிலையத்துக்கு 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த விபத்து குறித்து டிரைவரிடம் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து தனி தண்டவாளத்தில் ஏற்பட்டதால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com