முறைகேடாக சிம்கார்டுகள் பெற்ற வழக்கு: மாவோயிஸ்டு தம்பதி திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்

முறைகேடாக சிம்கார்டுகள் பெற்ற வழக்கில் திருப்பூர் கோர்ட்டில் மாவோயிஸ்டு தம்பதி நேற்று ஆஜரானார்கள்.
முறைகேடாக சிம்கார்டுகள் பெற்ற வழக்கு: மாவோயிஸ்டு தம்பதி திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்
Published on

திருப்பூர்,

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கடந்த 2015-ம் ஆண்டு கியூ பிரிவு போலீசார் மாவோயிஸ்டு தம்பதியான கேரளாவை சேர்ந்த ரூபேஷ், சைனியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் தங்கியிருந்த போது மற்றவர்களின் ஆவணங்களை பயன்படுத்தி முறைகேடாக சிம்கார்டுகள் பெற்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபேஷ், சைனி ஆகியோரை கைது செய்தனர்.

இதுபோல் முறைகேடாக சிம்கார்டுகள் பெற்றது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் சைனி, கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். விசாரணைக்கு அவர் கோர்ட்டில் ஆஜராகி வருகிறார். இந்த வழக்கின் விசாரணை நேற்று திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து ரூபேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூர் மாவட்ட கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

சைனி தனது மகளுடன் கோர்ட்டுக்கு வந்தார். ரூபேஷ், சைனி இருவரும் நீதிபதி அல்லி முன்னிலையில் ஆஜரானார்கள். இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம்(நவம்பர்) 12-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

பின்னர் கோர்ட்டு அனுமதி பெற்று ரூபேசை, சைனி சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து ரூபேசை போலீசார் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com