கால்வாய் குழாய்க்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக பரபரப்பு விரித்த வலையில் காட்டுப்பூனை சிக்கியது

குண்டடம் அருகே பி.ஏ.பி. கால்வாய் குழாய்க்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வனத்துறையினர் விரித்த வலையில் காட்டுப்பூனை சிக்கியது.
கால்வாய் குழாய்க்குள் சிறுத்தைப்புலி புகுந்ததாக பரபரப்பு விரித்த வலையில் காட்டுப்பூனை சிக்கியது
Published on

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை அடுத்த சங்கப்பாளையம் பிரிவு அருகே பெரும்பள்ளம் என்ற பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் மேய்ச்சல் நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள விவசாயிகள், தாங்கள் வளர்த்து வரும் செம்மறி ஆடுகளை இந்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த விவசாயி குமாரசாமி தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அந்த பகுதிக்கு ஓட்டிச்சென்றார்.

அப்போது, அங்குள்ள ஒரு தோட்டத்தின் வேலியோரம் படுத்திருந்த நீண்ட வாலுடன், தடித்த உருவம் கொண்ட ஒரு பெரிய விலங்கு அங்கிருந்த பி.ஏ.பி. கால்வாய் குழாய்க்குள் புகுந்து பதுங்கி கொண்டது. இதை பார்த்து பயந்து போன குமாரசாமி, அக்கம், பக்கத்தினருக்கு இது பற்றி தகவல் கொடுத்தார். அப்போது, அவர்களிடம், குழாய்க்குள் சென்ற விலங்கு சிறுத்தைப்புலி போன்று இருந்ததாக குமாரசாமி தெரிவித்தார்.

பரபரப்பு

உடனே அவர்கள், குழாய்க்குள் இருந்து சிறுத்தைப்புலி வெளியே தப்பிவிடக்கூடாது என்பதற்காக கற்களை கொண்டு குழாயை அடைத்தனர். பின்னர் இதுபற்றி காங்கேயம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காங்கேயம் வனச்சரக அலுவலர் நவீன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் பெரிய வலைகளுடன் காலை 10 மணிக்கு அங்கு வந்தனர்.

மேலும் குண்டடம் கால்நடை டாக்டர்கள் செந்தில்குமார், இளம்பரிதி, குண்டடம் போலீசார், வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதற்கிடையே சிறுத்தைப்புலியை பார்க்க சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வலை விரிப்பு

இதைத்தொடர்ந்து அந்த சிறுத்தைப்புலியை பிடிக்க குழாய்க்கு வெளியே ஒரு புறத்தில் பெரிய வலையை வனத்துறையினர் விரித்தனர். பின்னர் மறுமுனையில் பெரிய பிளாஸ்டிக் குழாயை கொண்டு உள்ளே இடித்தனர். ஆனால் உள்ளே இருந்த விலங்கு இரு புறமும் செல்லவில்லை.

இதனால் குழாய்க்குள் தண்ணீரை விட்டு நிரப்பினால் மறுபக்கம் அந்த விலங்கு வந்து விடும் என்று அங்கிருந்த அதிகாரிகள் கூறினார்கள். உடனே ஒரு டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து அந்த குழாயின் ஒரு பகுதியில் விட்டனர். சுமார் மணி நேரத்துக்கு பின்னர் தண்ணீருக்குள் இருப்பு கொள்ள முடியாமல் அந்த விலங்கு சீறியபடி வெளியே வந்தது.

காட்டுப்பூனை

சிறுத்தைப்புலி தான் வந்து விட்டது என்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர்கள் பின்வாங்கிய போது, அது பெரிய காட்டுப்பூனை என்று தெரிந்ததும் வனத்துறையினரும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர்.

இதன் மூலம் 6 மணி நேர வனத்துறை அதிகாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமார் 10 கிலோ எடை கொண்ட அது, ஆண் காட்டுப்பூனையாகும். பின்னர் அந்த காட்டுப்பூனை ஊதியூர் அருகே உள்ள காப்புக்காட்டில் விடப்பட்டது. இந்த சம்பவத்தால் குண்டடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com