மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது - நல்லசாமி

மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் நல்லசாமி கூறினார்.
மீத்தேன் திட்டத்தின் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது - நல்லசாமி
Published on

திருவண்ணாமலை,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் நல்லசாமி நேற்று திருவண்ணாமலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து பாமாயிலை மானிய விலையில் இறக்குமதி செய்கின்றது. இது வெளிநாட்டு விவசாயிகளை வாழ வைப்பதாகும். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய்களுக்கு மானியம் அளிக்காதது கண்டிக்கத்தக்கதாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களுக்கு மானியம் கூடாது. அவ்வாறு மானியம் வழங்கினால் ரேஷன் கடைகளை அடித்து நொறுக்குவோம்.

கள் இறக்குமதிக்கு அனுமதி மறுப்பது தமிழக மக்களுக்கு செய்யும் அநீதியாகும். கள் என்பது மது அல்ல. அது ஒரு உணவு பொருள் தான். குமரி அனந்தன் மதுவிலக்குக்கோரி உண்ணாவிரதம் இருந்தார். அவர், கள்ளும் ஒரு மது தான் என்ற நிலைபாட்டை கொண்டவர். அவர் கள்ளும் ஒரு தடை செய்யப்பட்ட போதை பொருள் தான் என நிரூபித்து விட்டால் கள் இயக்கம் கலைக்கப்படும். அவருக்கு ரூ.10 கோடி பரிசும் வழங்கப்படும். இந்த சவாலை ஏற்று அவர் வாதிட முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை நாங்கள் முன் வைக்கிறோம். இந்த சவால் அனைவருக்கும் பொருந்தும்.

இந்தியாவில் ஆறுகளை இணைக்க வேண்டும். விவசாயிகள், பலருக்கு உணவளித்தவர்கள். ஆனால் விவசாயிகளை தற்போது நடிகர்கள் காப்பாற்றுவது என்பது இழிவுபடுத்துவதாகும். 60 சதவீத விவசாயிகள் கொண்ட நாட்டில் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை. நடிகர்கள் எங்களை கேவலப்படுத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

நாங்கள் மதுவிலக்கு கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால் மது வைத்து தான் எல்லாம் நடக்கிறது என்று அரசு நிலைப்பாடு கொண்டுள்ளதால் உலக நாடுகள் பனை, தென்னையை வைத்து மது தயாரித்து உலக அளவில் சந்தைப்படுத்துவது போல் நம் நாட்டிலும் அவ்வாறு செய்ய வேண்டும். மதுவிலக்கு அரசின் இலக்காக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மீத்தேன் எடுத்தால் விவசாயம் பாதிக்கும், தமிழகம் பாலைவனமாகும். தமிழ்நாட்டை பாலைவனமாக்குவதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. இதனை முறியடிக்கும் பொறுப்பு ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கு உள்ளது. தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் நடிகர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்ற மனநிலை மாற வேண்டும் என்று அவர் கூறினார்.

பேட்டியின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாக்கடை புருஷோத்தமன், பொருளாளர் சிவா, துணைத்தலைவர் சந்திரசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com