பெரியார் சிலையை சேதப்படுத்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

பெரியார் சிலையை சேதப்படுத்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் சிலையை சேதப்படுத்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி கிராமம் உள்ளது. இங்குள்ள குளம் அருகே பெரியாரின் முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை கடந்த 2013-ம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார். இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி இரவு மர்ம ஒருவர் நபர் பெரியார் சிலையின் தலையை துண்டித்தும், சிலையின் கையில் இருந்த தடியையும் சேதப்படுத்தி இருந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.

மேலும், சம்பவத்தன்று இரவு அந்த பகுதிக்கு யாரெல்லாம் வந்தனர். மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். பெரியார் சிலையை உடைத்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

முதல்கட்டமாக அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவை சோதனை செய்தனர். அப்போது அந்த கேமராவில் புதுக்கோட்டை விடுதி கிராமத்தை சேர்ந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரர் செந்தில்குமார்(வயது 35) அந்த பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் குடிபோதையில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தான் மதுபோதையில் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இது குறித்து நடத்திய தொடர் விசாரணையில் செந்தில்குமார், சத்தீஸ்கார் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில்(சி.ஆர்.பி.எப்.) போலீஸ்காரராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் மனச்சிதைவு நோய் காரணமாக கடந்த மாதம் 12-ந் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளது தெரிய வந்தது. இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்த அவர், பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றுள்ளார்.

அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் செந்தில்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2013-ம் ஆண்டு செந்தில்குமார் வீட்டின் அருகே பெரியார் சிலையை வைக்க முயற்சி நடந்துள்ளது. அப்போது அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலையை உடைப்பேன் என்று மிரட்டல் விடுத்து இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com