முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை - பரமேஸ்வருக்கு, சித்தராமையா பதிலடி

மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வருக்கு சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை - பரமேஸ்வருக்கு, சித்தராமையா பதிலடி
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக உள்ள பரமேஸ்வர் நேற்று முன்தினம் கட்சி மேலிடம் தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயாராக இருப்பதாக கூறி இருந்தார். கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியில் 5 ஆண்டுகளும் குமாரசாமியே முதல்-மந்திரியாக இருப்பார் என்று காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்களும் ஏற்கனவே முடிவு செய்துள்ளனர்.

தற்போது பரமேஸ்வர் முதல்-மந்திரி பதவி வழங்கினால் ஏற்க தயார் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி ஆகும் தகுதி பலருக்கு இருக்கிறது. ஆனால் தற்போது மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி காலியாக இல்லை. முதல்-மந்திரியை மாற்றம் செய்யவும் முடியாது. அதற்காக பரமேஸ்வர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கத்தான் செய்யும். அதுபோல தான் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசையை பரமேஸ்வரும் வெளிப்படுத்தி உள்ளார்.

மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. அந்த 6 இடங்களையும் நிரப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரை சந்தித்து பேச முடியவில்லை. ராகுல்காந்தியின் அனுமதி கிடைத்தவுடன் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும்.

எனது தலைமையிலான ஆட்சியில் இந்திரா மலிவு விலை உணவகம் தொடங்கும் திட்டத்தை கொண்டு வந்தேன். இந்த திட்டம் காங்கிரசுக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அந்த நற்பெயரை கெடுக்க இந்திரா மலிவு விலை உணவகம் அமைத்ததில் முறகேடு நடந்திருப்பதாக பா.ஜனதாவினர் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதனை மாநில மக்கள் நம்ப மாட்டார்கள். பெலகாவியில் கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கரும்பு விவசாயிகள் நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்துள்ளனர். கரும்பு விவசாயிகளின் பிரச்சினைகளை முதல்-மந்திரி குமாரசாமி பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைப்பார்.

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. அந்த அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு விடுவதில்லை. ஆந்திராவுக்குள் சி.பி.ஐ. நுழைய தடை விதித்து அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். அவரின் இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன். நாட்டின் முதல் பிரதமர் நேருவை, ஹிட்லர் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கூறியுள்ளனர். இதன்மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் மனநிலை எந்த அளவில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com