உடுமலை அருகே அட்டகாசம் செய்து வந்த ‘சின்னதம்பி’ யானை சிக்கியது

உடுமலை அருகே அட்டகாசம் செய்து வந்த சின்னதம்பி யானை சிக்கியது. துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
உடுமலை அருகே அட்டகாசம் செய்து வந்த ‘சின்னதம்பி’ யானை சிக்கியது
Published on

மடத்துக்குளம்,

கோவை தடாகம் பகுதியில் இருந்து கடந்த மாதம் 25-ம் தேதி பிடிக்கப்பட்ட சின்னதம்பி யானை டாப்சிலிப் அருகே வனப்பகுதியில் விடப்பட்டது. அந்த யானை பொள்ளாச்சி பகுதிக்கு கடந்த மாதம் 31-ந் தேதி தஞ்சம் அடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அது மறுநாள் அதிகாலை திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

7 நாட்கள் அங்கு முகாமிட்ட சின்னதம்பி, அருகில் உள்ள கண்ணாடி புத்தூர் பகுதியில் தஞ்சம் அடைந்தது. கடந்த ஒரு வாரமாக சின்னதம்பியை விரட்ட வனத்துறையினர் முயற்சி செய்தும் முடியவில்லை. மேலும் சின்னதம்பி யானை இருக்கும் அமராவதி ஆற்றங்கரையில் உள்ள விவசாய பகுதியில் பயிரிட்டுள்ள, கரும்பு, வாழை, நெல், தென்னை போன்ற பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. எனவே இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சின்னதம்பியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சின்னதம்பி யானையை பிடித்து முகாமில் அடைத்து வைக்க வேண்டும் என்றும், அதை பாதுகாப்பாக பிடிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் சின்னதம்பி யானையை பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளை நேற்று முன்தினம் வனத்துறையினர் செய்தனர். இதைதொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு சின்னதம்பி யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினார்கள்.

கரும்பு தோட்டத்தில் இருந்து காலையில் வெளியே வந்த சின்னதம்பிக்கு முதலில் காலை 7.30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அடுத்து 8 மணிக்கு 2-வது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 3-வது முறையாக 8.30 மணிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால் அந்த ஊசி யானையின் உடலில் நிற்காமல் சிறிது நேரத்தில் கீழே விழுந்தன. இதனால் 3 முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து வனத்துறையினர் சின்னதம்பியை பிடிக்க புதிய முயற்சியை மேற்கொண்டனர். அதன்படி, பலாப்பழத்தை சின்னதம்பியிடம் காட்டி அருகே வரவழைத்தனர். மெல்ல, மெல்ல சின்னதம்பி யானை பலாப்பழத்தை ருசிக்க ஆசைப்பட்டு காலை 9.30 மணிக்கு அங்கே வந்தது.

உடனே அங்கு தயாராக இருந்த டாக்டர் அசோகன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை சின்னதம்பி யானையின் வயிற்று பகுதியில் செலுத்தினார். இதை உணர்ந்த சின்னதம்பி யாருக்கும் பிடி படாமல் மீண்டும் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்த சின்னதம்பி யானையை அங்கு தயாராக இருந்த கும்கி யானைகள் கலீம், சுயம்பு ஆகியவை அருகில் சென்று தள்ளியது.

அப்போது சின்னதம்பி யானை முழு மயக்க நிலையை அடைந்தது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கும்கி யானை மீது அமர்ந்து இருந்த பாகன், மெல்ல எழுந்து சின்னதம்பி யானை மீது தாவினார். உடனே வனத்துறையினர் தாங்கள் தயாராக கொண்டு வந்த பெரிய கயிற்றை கொண்டு சின்னதம்பி யானையை கட்டினார்கள். இதனையடுத்து சின்னதம்பி யானையை ஏற்ற வசதியாகவும், வாகனங்கள் செல்ல வசதியாகவும், அங்கு இருந்த வாழைத்தோட்டத்திற்குள் மண் மேடை அமைத்தும், பெரிய சாலைபோன்றும் அமைக்கப்பட்டது.

பின்னர் கும்கி யானைகள் உதவியுடன், சின்னதம்பி யானையை லாரியில் ஏற்றும் பணி தொடங்கியது. அப்போது, தொடர்ந்து சின்னதம்பியை சுயம்பு என்ற கும்கி யானை முட்டி தள்ளியது. சுமார் பத்து தடவைக்கும் மேலாக முட்டி தள்ளியும் அது லாரியில் ஏற மறுத்தது. மதியம் 2.30 மணியளவில் சுயம்பு யானை, சின்னதம்பி யானையை ஒரே தள்ளாக தள்ளி லாரியில் ஏற்றியது.

இதனை கண்ட பொதுமக்கள் கைகளை தட்டி, ஓசை எழுப்பி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். பின்னர் சின்னதம்பி யானை டாப்சிலிப் பகுதியில் உள்ள முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கரும்பு, தென்னை, வாழைகள் சேதம்

கண்ணாடிப்புத்தூர் பகுதியில் சின்னதம்பி யானை கடந்த 7-ந் தேதி முதல் தஞ்சம் அடைந்து இருந்தது. அங்கு வரிசையாக வாழை தோட்டம், கரும்பு தோட்டம், தென்னந்தோப்புகள் என்று இருந்ததால் அதற்கு போதுமான உணவுகள் அங்கேயே கிடைத்தது. இதனால் சின்னதம்பி யானை கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்குள்ள கரும்பு காட்டிலேயே தஞ்சம் அடைந்தது.

மேலும் இரவு நேரங்களில் ஆறுமுகம் என்பவரின் தென்னந்தோப்பில் 27 தென்னை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன், சேதுராமன், அழகம்மாள், மகாலிங்கம் ஆகியோரின் கரும்பு தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகளையும், செந்தில் என்பவரின் வாழை தோட்டத்தையும் சின்னதம்பி யானை சேதப்படுத்தியது.

சேதமடைந்த பயிர்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்றும், எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


டாப்சிலிப் முகாமில் சின்னதம்பி யானை கூண்டுக்குள் அடைக்கப்பட்டு பராமரிக்கப்படும் - ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் பேட்டி

ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மடத்துக்குளம் அருகே கண்ணாடி புத்தூர் பகுதியில் முகாமிட்டிருந்த சின்னதம்பி யானை தானாக வனப்பகுதிக்கு சென்றுவிடும் என்று பார்த்தோம். ஆனால் அது செல்லவில்லை. தற்போது, கோர்ட்டு உத்தரவு படி, சின்னதம்பி யானை பிடிக்கப்பட்டு டாப்சிலிப் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அங்கு ஏற்கனவே இதுபோன்ற காட்டு யானைகளை அடைத்து வைக்க கூண்டு தயார் நிலையில் உள்ளது. அதில் சின்னதம்பி யானை அடைக்கப்பட்டு பராமரிக்கப்படும். பொதுவாக யானைகளை பழக்கப்படுத்த உருது மொழியில் 60 கட்டளைகள் உள்ளன. அவற்றை யானைகளுக்கு விளக்கமாக எடுத்துக்கூறி பயிற்சி அளிப்போம். பின்னர் அது பிற பணிகள் மேற்கொள்ள பழக்கப்படுத்தப்படும். சின்னத்தம்பி யானையை தற்போது பராமரிக்க மட்டுமே செய்வோம். கும்கியாக மாற்றுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

கண்ணாடிப்புத்தூர் பகுதியில் கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த சின்னதம்பி யானையை பிடிக்கும் பணியில் ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் கணேசன், திருப்பூர் மாவட்ட வனத்துறை அலுவலர் திலீப் மற்றும் டாக்டர் அசோகன், ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் தங்கராஜ் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார் (தளி), முருகன் (குடிமங்கலம்) உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பலாப்பழத்துக்கு ஏமாந்த சின்னதம்பி யானை

சின்னதம்பி யானையை பிடிக்கும் போது 3 முறை மயக்க ஊசி பொருத்தப்பட்ட துப்பாக்கியால் சுட்டும், அந்த ஊசிகள் யானையின் உடல் மீது சிறிது நேரம் கூட நிற்கவில்லை. இதனால் சின்னதம்பி யானை கரும்பு தோட்டத்துக்குள் சென்று மறைந்து கொண்டது. இதனால் சின்னதம்பி யானையை வெளியே வரவழைக்க பலாப்பழத்தை அதனிடம் வனத்துறையினர் காட்டினார்கள். இதனால் அது, பலாப்பழத்தை தின்பதற்காக அவர்களை தொடர்ந்து கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தது.

அப்போது, 4-வது முறையாக அதன் வயிற்று பகுதியில் துப்பாக்கியால் சுட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதில் தான் அது முழு மயக்க நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து அது லாரியில் ஏற்றப்பட்டது. பலாப்பழத்துக்கு ஏமாந்து அது வனத்துறையினரிடம் பிடிபட்டது.

கதறி அழுத பெண் விவசாயி

சின்னதம்பி யானை மற்றும் கலீம், சுயம்பு ஆகிய கும்கி யானைகள் தனது 3 ஏக்கர் கரும்புத்தோட்டத்தை முற்றிலும் சேதப்படுத்தியதாக கள இயக்குனர் கணேசனின் கைகளை பிடித்துக்கொண்டு அழகம்மாள் என்ற பெண் விவசாயி கதறி அழுதார். மேலும் முதல்-அமைச்சருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவித்து உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்தார்.

செல்போனில் படம் பிடித்த பொதுமக்கள்

சின்னதம்பி யானையை பிடிக்கும் காட்சியை காண்பதற்காக ஏராளமான பொதுமக்கள் கண்ணாடிப்புத்தூர் கிராமத்துக்கு நேற்று காலை வாகனங்களில் வந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பகல் நேரத்தில் வெயில் வாட்டிய போதும் அதை பொருட்படுத்தாமல் திரளான பொதுமக்கள் வேடிக்கை பார்க்க திரண்டு இருந்தனர். அவர்கள் தங்கள் செல்போன்களில் சின்னதம்பி யானையை பிடிக்கும் காட்சிகளை படம் பிடித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com