பம்மல் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
பம்மல் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி
Published on

தாம்பரம்,

சென்னையை அடுத்த பம்மல் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த நகராட்சியில் நாகல்கேணி பகுதியில் ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளது. இதனால் பல இடங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அனைத்து குடியிருப்பு பகுதிகளுக்கும் நகராட்சி சார்பில் போதிய குடிநீர் வழங்கப்படாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததே குடிநீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தே.மு.தி.க.வினர் போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் பம்மல் நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், நகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் நகர மன்ற தலைவர் வே.கருணாநிதி தலைமையில் முன்னாள் கவுன்சிலர்கள் 9 பேர் தி.மு.க. சார்பில் நகராட்சி நிர்வாக ஆணையரிடம் புகார் அளித்தனர். மேலும், நகராட்சி ஆணையரை கண்டித்து பம்மல் நகராட்சி முழுவதும் தி.மு.க. சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

பம்மல் சூரியம்மன் கோவில் பகுதியில் உள்ள கிணற்றில் மோட்டார் மற்றும் குழாய்கள் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. அதேபோல இரட்டை மலை சீனிவாசன் தெருவில் உள்ள கிணறும் பராமரிக்கப்படாமல் உள்ளது. இவற்றை சீர் செய்யாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com