

கன்னியாகுமரி,
நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெறுகிறது.
இதையொட்டி பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 1,650 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் சுடலைமணி, சரவணபெருமாள் தலைமையிலான குழுவினர் 2 அதிநவீன படகுகளில் கன்னியாகுமரி கடல் பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவினர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையும், மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் முட்டம் வரையிலும் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது படகுகளில் வந்த மீனவர்களிடம் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி அவர்கள் சோதனை நடத்தினர்.
மேலும், கன்னியாகுமரி, சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள கடலோர சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும்படியாக யாரும் தங்கியுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தனர்.