செங்கனேரி-வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் பார்வையிட்டனர்

செங்கனேரி-வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா, கலெக்டர் விஜயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டனர்.
செங்கனேரி-வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி கண்காணிப்பு அதிகாரி, கலெக்டர் பார்வையிட்டனர்
Published on

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ்நாடு இ-சேவை மைய ஆணையரும், முதன்மை செயல் அதிகாரியுமான சந்தோஷ் கே மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஆண்டிமடம் ஒன்றியத்தில் வடுகபாளையம் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செங்கனேரி மற்றும் வரத்து வாய்க்கால் தூர் வாரும் பணியினை பார்வையிட்டு, பணிகள் மேற்கொள்பவர்களிடம் ஊதியம் குறித்து கேட்டறிந்தார். வடுகபாளையம் ஊராட்சியில் வேளாண்மைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் மழைத்தூவான் முறை மற்றும் ஆழ்குழாய் கிணற்றில் சூரிய ஒளி மின்மோட்டார் மூலம் 1.20 எக்டேரில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயியிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சந்தோஷ் கே மிஸ்ரா வேளாண்மைத்துறையின் சார்பில் ஜெயங்கொண்டத்தில் 2015-16-ம் ஆண்டு தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 33 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா திரவ உயிர் உர உற்பத்தி மையத்தில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா போன்ற திரவ உயிர் உர வகைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

அஸ்தினாபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 1 எக்டேர் பரப்பளவில் நிலப்போர்வை மற்றும் நுண்ணீர் பாசனம் மூலம் சம்மங்கி பூ பயிரிடப்பட்டுள்ள நிலத்தினையும், படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிரையும் அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சந்தோஷ் கே மிஸ்ரா, கலெக்டர் விஜயலட்சுமியுடன் சென்று பார்வையிட்டு விவசாயியிடம் பயிர் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இதேபோல் திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கலந்துரையாடல் மேற்கொண்டு, ஆசிரியர்களிடம் தினசரி செய்தித்தாள் களில் வெளிவரும் தகவல்கள் குறித்து மாணவர்களிடையே உரையாடி பொது அறிவை வளர்க்க வேண்டும் எனவும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் எனவும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர் திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகளை ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடல் மேற்கொண்டார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் திருமழப்பாடியில் உள்ள தலைமை நீரேற்றும் நிலையத்தை பார்வையிட்டு, குடிநீர் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணைப்பதிவாளர் (பொது வினியோகத்திட்டம்) செல்வராஜ், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) அன்புராஜன், உதவி இயக்குனர்கள் சரண்யா, ராஜேந்திரன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், கலையரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com