கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.36 லட்சத்தில் பாலம் கட்டும் பணி - போக்குவரத்து மாற்றம்

கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.36 லட்சத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் ரூ.36 லட்சத்தில் பாலம் கட்டும் பணி - போக்குவரத்து மாற்றம்
Published on

கம்பம்,

கம்பம் பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக ஏகலூத்து, நெல்லுகுத்தி புளியமரம், பார்க்ரோடு வழியாக பத்திரப்பதிவு அலுவலகம் அருகேயுள்ள கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலம் வழியாக சின்னவாய்க்காலில் சங்கமிக்கும்.

நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடியிருப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் குடியிருப்புகளின் தண்ணீரும் இந்த ஓடைகள் வழியாக கலந்து சென்றன. மேலும் பாலம் சிறிய அளவில் இருந்ததால் மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பாலம் கட்டப்படும் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் போக்குவரத்தை மாற்றம் செய்வது குறித்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து நேற்று பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சாலை தோண்டப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. அதாவது கம்பத்தில் இருந்து குமுளி செல்லும் வாகனங்கள், வ.உ.சி திடல், ரேஞ்சர் அலுவலக ரோடு, பத்திரப்பதிவு அலுவலகம் வழியாக திருப்பி விடப்பட்டன.

அதேபோல் குமுளியில் இருந்து கம்பம் செல்லக்கூடிய வாகனங்கள் அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் சாலை, உழவர் சந்தை, பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டது. இதற்காக சாலை சந்திப்பு பகுதிகளில் அறிவிப்பு பலகை மற்றும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com