தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கலெக்டரிடம் நுகர்வோர் நலமன்றத்தினர் மனு

அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் எனவே தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கலெக்டரிடம், நல்லூர் நுகர்வோர் நலமன்றத்தினர் மனு அளித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் கலெக்டரிடம் நுகர்வோர் நலமன்றத்தினர் மனு
Published on

திருப்பூர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் நல்லூர் நுகர்வோர் நல மன்றத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- மெட்ரிக் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகளில் கல்வி கட்டணம் கூடுதலாக, மறைமுகமாக பெற்றோரிடம் கட்டாய வசூல் செய்வதாக புகார் கொடுத்திருந்தோம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சில தனியார் பள்ளிகளில் வேறு பெயரில் ரசீது கொடுக்கப்பட்டு, கூடுதல் கல்வி கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். இதுபோல் பஸ் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில பள்ளிகளில் டியூசன் என்ற பெயரில் கட்டாயப்படுத்தி அதற்கான கட்டணத்தை பெறுகின்றனர். தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை விளம்பர பலகையில், பெற்றோருக்கு தெரியும் வகையில் ஒட்ட வேண்டும் என அரசு உத்தரவிட்டும், இதுவரை எந்த பள்ளியிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. எனவே தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் பொதுநலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில் திருப்பூர் மாநகரில் பயணிகள் ஆட்டோ சுமார் 1500-க்கும் மேற்பட்டவை ஓடிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களுக்கே ஆட்டோ நிறுத்தம் இல்லாமல் இருக்கிறது. எனவே மீண்டும் ஆட்டோ பெர்மிட் வழங்காமல் எங்களது வாழ்வை காப்பாற்ற உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தனர்.

திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கொடுத்த மனுவில் திருப்பூர் சாமுண்டிபுரத்தில் கட்டிட தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றிருந்தனர்.

அவினாசி வட்டம் வள்ளிபுரம் பல்லாக்காட்டை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில் வள்ளிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பலமுறை விவசாய கடன் பெற அனைத்து ஆவணங்களும் சமர்ப்பித்தேன். ஆனால் விவசாய கடன் வழங்கப்படவில்லை. இதுபோல் பல விவசாயிகள் கடன் வழங்கப்படாமல் அலைக் கழிக்கப்படுகிறார்கள். மேலும், சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் நடந்து வருகிறது. எனவே இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தனர்.

இதுபோல் பல்லடம் நடுவேலம்பாளையம் ஊர்பொதுமக்கள் கொடுத்த மனுவில் பள்ளிகள் தொடங்கும் நிலையில் உள்ளதால் எங்கள் பகுதியில் சாதிச்சான்றிதழ் போன்றவை எடுக்க வேண்டியுள்ளது. எனவே இ-சேவை மையம் ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், எங்கள் பகுதியில் தெருவிளக்குகள் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் தெருவிளக்குகள் வசதி செய்து தர வேண்டும். இதுபோல் நடுவேலம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிகளில் இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து, குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

திருப்பூர் இடுவம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் கொடுத்த மனுவில் எனக்கு திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தேன். அப்போது திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்த போது, அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் என்னை முருகம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார். நாங்கள் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். தற்போது நான் 5 மாத கர்ப்பிணியாக உள்ளேன். இந்த நிலையில் எனது கணவரை அவரது பெற்றோர் என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். இதனால் எனது கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றிருந்தார்.

பெருந்தொழுவு கவுண்டம்பாளையம் பல்லக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த நடராஜன் கொடுத்த மனுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்து வட்டி கும்பல் வீட்டில் தனியாக இருந்த என் மனைவி ஜெயந்தியை கடுமையாக தாக்கப்பட்டார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அந்த கும்பல் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகள், ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டனர். எனவே கந்துவட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருந்தார். அனுமன் சேனா மற்றும் சிவசக்தி மகளிர் அமைப்பினர் கொடுத்த மனுவில் வி.மேட்டுப்பாளையம் குமரானந்தாபுரம் பகுதியில் 30 வருடமாக 300-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே அந்த பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com