‘கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்’ என்ற சர்ச்சை உத்தரவு: முதல்-மந்திரி குமாரசாமி, மன்னிப்பு கேட்க மறுப்பு

கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்ற சர்ச்சை உத்தரவுக்கு மன்னிப்பு கேட்க குமாரசாமி மறுத்துள்ளார்.
‘கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள்’ என்ற சர்ச்சை உத்தரவு: முதல்-மந்திரி குமாரசாமி, மன்னிப்பு கேட்க மறுப்பு
Published on

பெங்களூரு,

மண்டியா மாவட்டம் மத்தூரில் ஜனதா தளம்(எஸ்) பிரமுகர் பிரகாஷ்(வயது50) என்பவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை நடந்தபோது முதல்-மந்திரி குமாரசாமி விஜயாப்புராவில் இருந்தார். அவருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே மண்டியா மாவட்ட போலீஸ் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய குமாரசாமி, கொலையாளிகளை கருணை காட்டாமல் சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவிட்டார். இந்த உரையாடல் அடங்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள முதல்-மந்திரியே, கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று உத்தரவிடுவது சரியா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. முதல்-மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியது.

இந்தநிலையில் கொலையாளிகளை சுட்டுத்தள்ளுங்கள் என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க குமாரசாமி மறுத்துவிட்டார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் எளிதில் உணர்ச்சி வசப்படுபவன். ஒரு சாதாரண குடிமகன் பிரச்சினையில் சிக்கினாலும் நான் அவ்வாறே உணர்ச்சி வசப்படுவேன். என்னை பொறுத்தவரையில் நான் செல்போனில் போலீசாருக்கு உத்தரவிட்ட விவகாரம் முடிந்துவிட்டது.

ஆவேசத்தில் அவ்வாறு பேசிவிட்டேன். அந்த வார்த்தையை திரும்ப பெற்று அதற்கு பதிலாக கொலையாளிகளை கண்டுபிடியுங்கள் என்று கூறினேன். அது தான் எனது இறுதி வார்த்தை.

நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஹாவேரியில் 2 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது பெரிய விவகாரம் இல்லையா?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com