பிணத்தை ஏற்றி சென்ற வேன் சிக்கிய விவகாரம்: முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு

உத்திரமேரூர் அருகே பிணத்தை வேனில் ஏற்றிச்சென்றது தொடர்பாக முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கடந்த மாதம் மட்டும் அந்த இல்லத்தில் 60 பேர் இறந்துள்ளதாக அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிணத்தை ஏற்றி சென்ற வேன் சிக்கிய விவகாரம்: முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு
Published on

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற முதியவர்களை பராமரிக்கும் புனித ஜோசப் ஹாஸ்பீசஸ் என்ற தனியார் கருணை இல்லம் உள்ளது. இதற்கு திண்டுக்கல், தாம்பரம் அடுத்த இரும்புலியூர், வேலூர் மாவட்டம் திருவலம், விழுப்புரம் மாவட்டம் புளிச்சபள்ளம் ஆகிய பகுதிகளில் கிளைகள் உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கருணை இல்லத்திற்கு சொந்தமான வேனில் காய்கறிகளுடன் ஒரு பிணமும் எடுத்து வரப்பட்டது. அப்போது அந்த வேனில் இருந்த ஒரு வயதான ஆண் மற்றும் பெண் ஆகியோர் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டனர். உடனே அப்பகுதி மக்கள் அந்த வேனை மடக்கி பிடித்தனர்.

அப்போது அந்த வேனில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த செழியன், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் ஆகியோரை மீட்டனர். பின்னர் அவர்களையும், வேனையும் சாலவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வேன் டிரைவர் ராஜேஷ் (வயது 22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், அந்த முதியோர் இல்லத்தை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, முதியோர் இல்லத்தில் வயதானவர்களை கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும், முதியோர்களை வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளதாகவும் கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள வேனின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர். பின்னர் சாலவாக்கம் போலீஸ் நிலையம் முன்பும் போராட்டம் நடத்தினர்.

இதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், உத்திரமேரூர் தாசில்தார் அகிலாதேவி மற்றும் அதிகாரிகள் முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பிணங்களை வைக்க பயன்படுத்தும் கட்டிடத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த முதியோர் இல்லத்தின் மீது எழுந்துள்ள புகாரை தொடர்ந்து ஆய்வு நடத்தினோம். முதியோர் இல்லம் நடத்துவது தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தோம். மேலும், இந்த இல்லம் நடத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அனைத்து துறை அறிக்கையும் கிடைத்தபிறகு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்போம் என்றார்.

அந்த இல்லத்தில் உள்ள முதியவர் ஒருவர் கூறுகையில், தஞ்சாவூரை சேர்ந்த நான் சென்னை வளசரவாக்கத்திற்கு வேலை செய்வதற்காக வந்தேன். அப்போது சிலர் என்னை இந்த முதியோர் இல்லத்தில் அடைத்து வைத்தனர். கடந்த 6 மாதமாக என்னை வெளியே விடாமல் அடைத்து வைத்துள்ளனர் என்றார்.

இந்த முதியோர் இல்லத்தில் மாதத்திற்கு 30 முதல் 50 பேர் உயிர் இழக்கின்றனர் என்றும், கடந்த மாதம் (ஜனவரி) மட்டும் 60 பேர் இறந்துள்ளதாகவும் அங்குள்ளவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com