சாவிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிர் பிரிந்தது பாகூர் அருகே உருக்கமான சம்பவம்

பாகூர் அருகே மனைவி இறந்த சோகத்தில் துக்கம் தாங்காமல் அழுத கணவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாவிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த சோகத்தில் கணவர் உயிர் பிரிந்தது பாகூர் அருகே உருக்கமான சம்பவம்
Published on

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூரை அடுத்த ஆதிங்கப்பட்டு சத்யா நகரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 76). இவரது மனைவி ராதா (68). இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன்களின் பராமரிப்பில் ஏழுமலையும், ராதாவும் இருந்து வந்தனர். வயதானாலும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டு இணைபிரியாது பாசத்தோடு வாழ்ந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ராதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்கு வீட்டில் சிகிச்சைப்பெற்றும், நள்ளிரவு 12 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தன்னை நன்றாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் துக்கம் தாங்காமல் ஏழுமலை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தார். இதனால் அவர் சோர்வாக காணப்பட்டார்.

நேற்று காலை 11 மணியளவில் திடீரென்று ஏழுமலை மயங்கி விழுந்தார். உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏழுமலை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது.

ஏற்கனவே ராதா இறந்த தகவல் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் திரண்டிருந்தனர். தற்போது ஏழுமலையும் இறந்தது உறவினர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தம்பதிக்கு ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, அங்குள்ள சுடுகாட்டில் இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டது.

உயிரோடு வாழ்ந்தபோதும் ஒருவருக்கு ஒருவர் உதவி, பாசத்தோடு இருந்த தம்பதி சாவிலும் இணை பிரியாதது அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com