தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வீடுகள் இடிப்பதை தடுக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வீடுகள் இடிப்பதை தடுக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதிக்கப்படும் மக்களை சந்தித்த அ.ம.மு.க. பொருளாளர் ரெங்கசாமி கூறினார்.
தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக வீடுகள் இடிப்பதை தடுக்க நீதிமன்றம் மூலம் நடவடிக்கை
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக தஞ்சை வடக்கு அலங்கம், மேலஅலங்கம், செக்கடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை இடிக்க கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அ.ம.மு.க. மாநில பொருளாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான ரெங்கசாமி தஞ்சை வடக்கு அலங்கம், மேலஅலங்கம், காடிமரத்து மூலை, கோட்டை வளைவு உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்படும் மக்களை சந்தித்து பேசினார்.

ரெங்கசாமி பேட்டி

அப்போது வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதுடன், பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார். பின்னர் ரெங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா இருக்கும் வரை மக்கள் விரோத திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது தஞ்சை மாநகரில் பெரும்பான்மையான ஏழை மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் மேல அலங்கம், வடக்கு அலங்கம் போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களின் கருத்துக்களை, எண்ணங்களை முற்றிலும் சிதைக்கிற வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை நீர்த்து போகும் விதத்தில் அவர்களுடைய வீடுகளை இடிக்க முயற்சி செய்கின்றனர்.

இதற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் நிறைவேற்றக்கூடாது என சட்டசபையிலும் அவர் வலியுறுத்த உள்ளார். மேலும் பல்வேறு கட்ட போராட்டங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முன்னின்று நடத்தும். இதற்கு முன்பு நான் எம்.எல்.ஏ.வாக இருந்த போது ஸ்மார்ட்சிட்டி திட்ட கூட்டத்தில் ஏழை மக்களின் வீடுகளை இடித்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டாம். அகழி கரையை அகலப்படுத்தி அதன் உட்பகுதியில் விரிவுபடுத்தி அழகுபடுத்தினால் போதும் என்றேன்.

நீதிமன்றம் மூலம் தடையாணை

கீழஅலங்கத்தில் வீடுகளை இடிக்க முற்பட்ட போது கலெக்டரிடம் வலியுறுத்தி அதை தடுத்து நிறுத்தினேன். நான் எம்.எல்.ஏ.வாக இருக்கும் வரை வீடுகள் இடிக்கப் படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. அது போல இந்த பகுதியில் வீடுகள் இடிக்கும் திட்டத்திற்கு பலமுறை எதிர்ப்பை பதிவு செய்தேன். இப்போது மக்களுக்கு துணையாக இருந்து மக்களுடைய பாதிப்பை தீர்ப்பதற்காக அனைத்து வகையிலும் அ.ம.மு.க. முழு முயற்சியுடன் போராடும். இதற்காக பல வகையான போராட்டங்களை முன்னெடுத்து செல்ல உள்ளோம். குறிப்பாக நீதிமன்றத்தின் மூலமாக நிரந்தர தடையாணை பெற்று மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக முயற்சி எடுத்துள்ளோம்.

நகரை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலப்படுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று வழியில் இந்த திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்க வேண்டும். வீடுகள் இடிக்கும் திட்டத்தை இந்த அரசு கண்டிப்பாக நிறுத்த வேண்டும். அதற்காக நாங்கள் மக்களுடன் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தஞ்சை மாநகர் மாவட்ட சயலாளர் ராஜேஸ்வரன், வக்கீல்கள் தங்கப்பன், நல்லதுரை, பகுதி செயலாளர்கள் மகேந்திரன், அழகுராஜா மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com