ஆயுதபூஜையையொட்டி கரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது

ஆயுதபூஜையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக கரூர் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஆயுதபூஜையையொட்டி கரூர் கடைவீதியில் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் அலைமோதியது
Published on

கரூர்,

ஆயுதபூஜை இன்றும் (திங்கட்கிழமை), நாளை (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அலுவலகம், வீடுகளில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். பூஜையின் போது தேங்காய், பழ வகைகள், பொரி உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். தொழிற்சாலைகளில் எந்திரங்களை சுத்தம் செய்து பூஜைகள் நடத்தப்படும். இந்த நிலையில் கரூரில் ஆயுத பூஜைக்கான பூஜை பொருட்கள் வாங்குவதற்காக கரூர் ஜவகர்பஜார், பழையபைபாஸ் ரோடு, காமராஜர் மார்க்கெட் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பூஜை பொருட்கள், பழங்கள், பொரி மற்றும் வாழைக்கன்றுகள் ஆகியற்றை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி சென்றதை காண முடிந்தது. மக்கள் கூட்டம் கடைவீதிகளில் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததால் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க ஆங்காங்கே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண் காணிப்பு கேமரா மூலமாகவும் போலீசார் கண்காணித்தனர்.

விலை விவரம்

பொரி, நிலக்கடலை கலந்து பாக்கெட்டுகளில் பொட்டலமிட்டு பெரும்பாலான கடைகளில் விற்பனை செய்யப்பட்டன. ஒரு பாக்கெட் ரூ.30-க்கு விற்பனையானது. தனியாக ஒரு லிட்டர் பொரி ரூ.8-க்கு விற்றது. ஆயுதபூஜையையொட்டி சாமி படத்திற்கு அணிவிக்ககூடிய பூமாலைகள் விலை சற்று உயர்ந்திருந்தது. சிறிய செவ்வந்தி மாலை ஒன்று ரூ.100-க்கும், சம்மங்கி மாலை ரூ.150-க்கும் விற்பனையானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பூமாலைகள் ரூ.80, ரூ.120 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வாழைக்கன்று ஒரு ஜோடி ரூ.30-க்கும், வாழை இலை ஒன்று ரூ.8-க்கும் விற்றது. இதேபோல பழங்களின் விலைகளும் சற்று உயர்ந்திருந்தது. பூவன் பழம் ஒன்று ரூ.5 முதல் ரூ.8 வரைக்கும், ரஸ்தாலி ஒரு பழம் ரூ.4-க்கும், செவ்வாழை பழம் ரூ.10-க்கும் விற்றது. திருஷ்டி பூசணி ரூ.20, ரூ.30 என்கிற விலையில் விற்பனையானது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com