மதுரையில் ஊரடங்கு தொடர்கிறது: 6-ந்தேதி முதல் கடைகள் திறக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

மதுரை மாநகர் மற்றும் புறநகரில் ஊரடங்கு தொடர்கிறது. வருகிற 6-ந் தேதி முதல் கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.
மதுரையில் ஊரடங்கு தொடர்கிறது: 6-ந்தேதி முதல் கடைகள் திறக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு
Published on

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தணிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன், மாநகர் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் வினய் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசால் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள வேளாண்மை பணிகள், வேளாண் சார்ந்த தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் ஆகியவை எந்த வித தங்கு தடையின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படலாம்.

அனுமதி சீட்டுகள்

கனிமம் மற்றும் சுரங்கப் பணிகள், கட்டுமானப் பணிகளுக்கு தேவையான பொருட்களை வழங்கும் செங்கல் சூளைகள், கல் குவாரிகள், எம்சாண்ட், கிரஷர்கள் மற்றும் இவற்றிற்கான போக்குவரத்து ஆகியன செயல்படலாம். பெரும் தொழிற்சாலைகளும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும், கட்டுமான பணிகளை தொடங்க இணைய வழியில் விண்ணப்பித்து பணியாளர் மற்றும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டுகள் பெற வேண்டும்.

நகரப் பகுதிகளில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை தாங்கள் இயக்கும் பிரத்யேக பஸ்கள், வேன்கள் மூலம் பணிக்கு அழைத்து வரலாம். அந்த வாகனங்களில் 50 சதவீதம் அளவிற்கு மட்டுமே தனிநபர் இடைவெளியை கடைபிடித்து, பணியாளர்களை அழைத்துவரவேண்டும்.

திருமண நிகழ்ச்சி

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை. மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலகங்கள், 33 சதவீத பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும். கால் டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா போன்றவை இயங்காது. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

மதுரை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி எவ்விதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களை கொண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படலாம். நகர்ப்புறங்களில் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒருமுறை மட்டும் வேறு இடத்தில் இருந்து அழைத்து வர அனுமதிக்கப்படும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும்.

6-ந் தேதி முதல்....

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதால் புதிய அரசாணையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவேர், சிமெண்டு, கட்டுமானப் பொருட்கள், மின் சாதன விற்பனை கடைகள், செல்போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளும் வருகிற 6-ந் தேதி முதல் திறக்கலாம்.

இதுதவிர வேறு எந்த ஒரு கடைகளும் திறப்பதற்கு மதுரை மாநகராட்சி பகுதியில் தற்பொழுது அனுமதி இல்லை. வரும் நாட்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விதிமுறைகள் மதுரை மாநகராட்சி பகுதியில் படிப்படியாக தளர்த்தப்படும்.

உணவகங்கள்

அதே போல் மதுரை மாநகராட்சி தவிர புறநகர் பகுதிகளிலும் அனைத்து தனிக்கடைகளும் 6-ந்தேதி முதல் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். பிளம்பர், எலக்ட்ரீசியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், நோயாளிகள் ஆகியோரின் சிறப்பு தேவைகளுக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் அனைவரும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வராமல் www.tne-pass.tne-ga.org என்ற இணைய தள முகவரியில் மட்டும் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற வேண்டும். அச்சகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கடும் நடவடிக்கை

பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் மக்கள் கூட கூடாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசு விதித்துள்ள விதி முறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com