

ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் குமாரபுரம் தோப்பூரை சேர்ந்தவர் ஜோசப் சாமுவேல். இவருடைய மூத்த மகன் இன்ப சாதுலின் (வயது 22), இவர், நர்சிங் படித்து விட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இன்ப சாதுலின் சொந்த ஊரில் அவருடைய சித்தப்பா மகனுக்கு இன்று (சனிக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்ப சாதுலின் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.
இதற்காக அவர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பயணம் செய்தார். எக்ஸ்பிரஸ் ரெயில் ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் நிற்காது. ஆனால் ரெயில் நிலையத்தை நெருங்கும் போது சில நேரங்களில் மெதுவாக செல்வது உண்டு. எனவே அந்த நேரத்தில் ரெயிலில் இருந்து இறங்கி விடலாம் என நினைத்து இன்பசாதுலின் பயணம் செய்ததாக தெரிகிறது. ஆரல்வாய்மொழி ரெயில் நிலையம் வந்த போது, தனது பேக், சூட்கேஸ் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு அவசரமாக ரெயில் படிக்கட்டுக்கு வந்தார்.
ஆனால் ரெயில் மெதுவாக செல்லவில்லை. எனினும் அவர், நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து கீழே குதித்தார். அப்போது நிலைதடுமாறி பிளாட்பாரத்துக்கும்- ரெயிலுக்கும் இடையே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இன்பசாதுலின் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தை, நேரில் பார்த்த பயணிகள் அலறினர். ரெயில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து வந்து இன்பசாதுலினை மீட்டு பிளாட்பாரத்துக்கு கொண்டு வந்தனர். சிறிது நேரத்தில் இன்ப சாதுலின் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி கேள்விபட்ட இன்ப சாதுலின் குடும்பத்தினர், ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்துக்கு ஓடி வந்தனர். அங்கு மகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இன்பசாதுலின் தந்தை ஜோசப் சாமுவேல் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. பின்னர் நாகர்கோவில் ரெயில்வே போலீசார், இன்பசாதுலின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஊருக்கு திரும்பும் அவசரத்தில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரெயிலில் இருந்து குதித்தவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.