

சேதுபாவாசத்திரம்,
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒகி புயலில் சிக்கிய மீனவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் பஷீர்அகமது தலைமை தாங்கினார். மாவட்ட மாணவர் அணி செயலாளர் சந்திரபோஸ் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மாணவர் அணி செயலாளர் ரவிபிரகாஷ் கலந்து கொண்டு பேசினர்.
இதில் ஒகி புயலில் சிக்கி மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும், புயலில் உயிரிழந்த மீனவர் குடும்பத்தில் வாரிசுதாரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கோரிக்கை மனு
ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் மோனிகாவிடம், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கோரிக்கை மனுவை அளித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர்.